மும்பை: பஞ்சாப் பாடகரை கொன்றது போல் சினிமா தயாரிப்பாளர் சந்தீப் சிங்கையும் கொல்வோம் என்று கொலை மிரட்டல் வந்ததால், அவர் போலீசில் புகார் அளித்துள்ளார். பிரபல பஞ்சாபி பாடகரும், அரசியல்வாதியுமான சித்து மூசே வாலா கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு கும்பலால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் சர்வதேச கும்பலுடன் தொடர்புடைய பல கொலை குற்றவாளிகளுக்கு தொடர்பு இருப்பதால், ஒவ்வொருவராக போலீசார் கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர் சந்தீப் சிங் என்பவர், மகாராஷ்டிரா மாநிலம் அம்போலி போலீசில் அளித்த புகாரில், ‘பாடகர் சித்து மூசே வாலாவைப் போன்று என்னையும் கொன்றுவிடுவதாக பேஸ்புக் பக்கத்தில் ஒருவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். எனவே சம்பந்தப்பட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். அதையடுத்து மர்ம நபரின் கொலை மிரட்டல் குறித்து அம்போலி போலீசர் வழக்கு பதிந்து விசாரணையைத் தொடங்கி உள்ளனர். இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், ‘முதற்கட்ட விசாரணையில் கிருஷ்ணா சிங் ராஜ்புத் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் சந்தீப் சிங்கிற்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். சில சர்ச்சைக்குரிய படங்களை சந்தீப் சிங் எடுத்து வருவதால், அவருக்கு அச்சுறுத்தல் வந்திருக்கலாம். அவரது அடுத்த படமான ‘ஸ்வந்தந்த்ரா வீர் சாவர்க்கர்’ என்ற திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருகிறது. அதற்கு முன்னதாக அவருக்கு மிரட்டல்கள் வந்துள்ளன. அச்சுறுத்தல் விடுத்ததன் பின்னணி என்ன? என்பது குறித்து சைபர் கிரைம் போலீஸ் துணையுடன் விசாரித்து வருகிறோம்’ என்றனர்.