ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயார் விஜயலட்சுமி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் கெளரவத் தலைவர் பதவியை அதிரடியாக ராஜினாமா செய்துள்ளார். தெலங்கானாவில் தனிக் கட்சி நடத்தி வரும் தனது மகளுக்கு துணை நிற்க போவதாக அவர் அறிவித்துள்ளார்.
ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை அவர் செயல்படுத்தி வருவதால் திறமையான முதல்வர் என்ற பெயர் இவருக்கு இருக்கிறது. இதற்கிடையே, இவரது சகோதரியான ஒய்.எஸ். ஷர்மிளா, ஒய்எஸ்ஆர் தெலங்கானா என்ற பெயரில் கட்சி நடத்தி வருகிறார்.
தெலங்கானாவில் இவரது கட்சி செயல்பட்டு வருகிறது. தனிக் கட்சி என்ற போதிலும் தனது சகோதரரின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியுடன் பல்வேறு விஷயங்களில் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி முரண்பட்டு நிற்கிறது. உதாரணமாக, தெலங்கானாவை தனி மாநிலமாக பிரித்தது, நதி நீர் பங்கீடு உள்ளிட்ட விவகாரங்களில் இரு கட்சிகளும் வெவ்வேறு நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் இறுதியாக அக்கட்சியின் கெளரவத் தலைவரும், முதல்வர் ஒய்எஸ் ஜெகன்மோகன் ரெட்டியின் தாயாருமான விஜயலட்சுமி உரையாற்றினார். அவர் பேசியதாவது:
எனது கணவர் ஒய்எஸ் ராஜசேகர ரெட்டி, தெலங்கானா பிராந்திய மக்கள் குறித்து கண்ட கனவை நனவாக்குவதற்காக எனது மகள் ஒய்.எஸ். ஷர்மிளா பாடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் எனது மகளுடன் நிற்பது தான் சரி என்று கருதுகிறேன். ஆந்திராவில் எனது மகன் ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல்வர் ஆவார் என்பதில் எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அவரது சோதனைக் காலம் முடிவடைந்துவிட்டது. இப்போது எனது மகளுக்குதான் சோதனைக்காலம் நடைபெற்று வருகிறது. ஆதலால், அவருக்கு துணைநிற்க முடிவு செய்துள்ளேன். அதன்படி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் கெளரவத் தலைவர் பதவியில் இருந்து ராஜினாமா செய்கிறேன். இவ்வாறு விஜயலட்சுமி பேசினார்.
இந்நிலையில், விஜயலட்சுமி இவ்வாறு அதிரடியான முடிவை அறிவிப்பார் என முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி எதிர்பாக்கவில்லை எனக் கூறப்படுகிறது. அதனால் தனது தாயாரின் அறிவிப்பு அவருக்கு பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM