புதுடெல்லி: தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நாராயண், மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகிய மூவர் மீது சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது.
பங்குச் சந்தை வர்த்தகத்தை மேம்படுத்தும் நோக்கில் 2010-ம் ஆண்டு தேசிய பங்குச் சந்தை நிறுவனம் (என்எஸ்இ), கோ-லொக்கேஷன் வசதியை அறிமுகம் செய்தது. அதாவது, என்எஸ்இ சர்வருடன் புரோக்கிங் நிறுவனங்களின் சர்வர்களை இணைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டது.
இந்தக் கட்டமைப்பை முறைகேடாக பயன்படுத்தி சில குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு பங்குச் சந்தை தொடர்பான விவரங்களை முன்னதாக வழங்கியதாக 2015-ம் ஆண்டு என்எஸ்இ மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இவ்வழக்குத் தொடர்பாக 18 பேர் மீது பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபி அபராதம் விதித்துள்ளது. என்எஸ்இக்கு ரூ.7 கோடி, அதன் முன்னாள் தலைமை செயல் அதிகாரிகளான சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் ரவி நாராயண் ஆகியோருக்கு தலா ரூ.5 கோடி, என்எஸ்இ முன்னாள் குழும செயல்பாட்டு அதிகாரி ஆனந்த் சுப்ரமணியனுக்கு ரூ.5 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தவிர, வே2வெல்த், ஜிகேஎன், சம்பார்க் ஆகிய நிறுவனங்கள் மீது ரூ.6 கோடி, ரூ.5 கோடி, ரூ.3 கோடி முறையே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
2013 முதல் 2016 வரையில் என்எஸ்இயின் 2013 முதல் 2016 வரை சிஇஓ-வாக இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இமயமலை யோகி ஒருவரின் ஆலோசனையின்படியே நிறுவனம் தொடர்பான அனைத்து நிர்வாக முடிவுகளையும் எடுத்துவந்துள்ளார். அந்த யோகியின் அறிவுறுத்தலின் படியே, பங்குச் சந்தை நிர்வாகம் தொடர்பாக முன்அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்ரமணியனை அதிக ஊதியத்துக்கு சித்ரா ராமகிருஷ்ணா பணிக்கு அமர்த்தினார் என்பது தெரியவந்தது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ஆனந்த் சுப்ரமணியனையும், மார்ச் முதல் வாரத்தில் சித்ரா ராமகிருஷ்ணாவையும் சிபிஐ கைது செய்தது. தற்போது அவ்விருவரும் திகார் சிறையில் உள்ளனர்.
இந்தநிலையில் சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நரேன். மும்பை காவல்துறை முன்னாள் ஆணையர் சஞ்சய் பாண்டே ஆகிய மூவர் மீதும் சிபிஐ புதிய வழக்கு பதிவு செய்துள்ளது. அவர்கள் மூவரும் தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் அதிகாரிகள், ஊழியர்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக்கேட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த ஒட்டுகேட்பு விவகாரமானது 2009 – 2017 வரையில் கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
ஏற்கனவே கோ லொகேஷன் வழக்கில் அபாரதம் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது கூடுதலாக இந்த வழக்கும் சேர்ந்துள்ளது.