ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே மறைவுக்கு இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இரங்கல் தெரிவித்துள்ளார்.
ஞாயிறன்று நடைபெற இருக்கும் ஜப்பான் நாடாளுமன்ற மேலவை தேர்தலுக்காக பிரச்சாரம் செய்து வந்த அபே மேற்கு ஜப்பானில் உள்ள நாரா நகரில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார்.
இந்திய நேரப்படி இன்று காலை 8 மணிக்கு கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்த போது பின்னால் இருந்து இரண்டு முறை அவரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்த அபே சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தார் ஹெலிகாப்டர் மூலம் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றதில் அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியானதாகவும் இதயம் செயல்பாடு நின்று போனதாகவும் கூறப்பட்டது.
பின்னர் இன்று மதியம் 1:33 மணிக்கு அவரது உயிர் பிரிந்ததாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர் கைது செய்யப்பட்டார். அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
உலக தலைவர்கள் பலரும் இந்த காட்டுமிராண்டி தனமான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே உடனான தனது நினைவுகளை பகிர்ந்து கொண்டார். “நான் பிரதமராக இருந்த காலத்தில், இரு நாடுகளின் உறவுகளை உலகளாவிய கூட்டாண்மை நிலைக்கு உயர்த்த நாங்கள் பணியாற்றினோம். எங்களின் முயற்சிகள் இந்தியா-ஜப்பான் உறவுகளை தரம் வாய்ந்த புதிய நிலைக்கு உயர்த்தியது,” என்று தனது இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.