பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் வெளியீட்டு விழா கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. மருத்துவமனையில் இருக்கும் விக்ரம், பாலிவுட்டில் இருக்கும் ஐஸ்வர்யா ராய் தவிர, படத்தில் நடித்த பலரும் விழாவுக்கு வந்திருந்தனர்.
படத்தில் வந்தியத்தேவனாக நடித்திருக்கும் நடிகர் கார்த்தி இவ்விழாவில் பேசியதாவது, “இந்தப் படத்தை பத்தி நான் என்ன சொல்றது… ஜெயமோகன் அழகா பேசிட்டாரு. பாரதி பாஸ்கர் ரொம்ப அழகாகப் பேசிட்டாங்க. இந்த மேடை எனக்கு முக்கியமான மேடை. மணி சாருடைய அசிஸ்டென்ட்டாக, மணி சார்கூட சுமோல பின்னாடி லக்கேஜோட போன பையன் நான்… இன்னைக்கு மணி சார் எனக்கு இந்த மேடையைக் கொடுத்திருக்கார். அதுக்கு அவருக்குப் பெரிய நன்றி சொல்லிக்கிறேன்.
நான் ஹிஸ்டரி வகுப்புக்கு பயந்து ஓடுற ஆளு. பாதி நேரம் தூங்கிடுவேன். அப்படி நாம முழிச்சுருக்கற கொஞ்ச நேரம் கூட, நம்மள யாரு ஆண்டாங்க, நம்ம எப்படி சூரையாடப்பட்டோம், நம்ம எப்படி அடிமையானோம் அப்படிங்கிற வரலாற்றைப் படிச்சிருப்போம். நம்ம இப்போ ‘தமிழன் தமிழன்’னு சொல்றோம். அப்படி என்னடா நீ தமிழன்னு கேட்டா நம்மகிட்ட பதில் இருக்காது. நம்ம மன்னர்கள் எப்படி இருந்தாங்க, நம்ம நாடு எப்படி இருந்தது, நம்ம அரசாட்சி எப்படி இருந்ததுன்னு கேட்டா நமக்குத் தெரியாது. ஆனா அதை நாம தெரிஞ்சிக்க வேண்டியது ரொம்ப ரொம்ப அவசியம்.
சொல்றதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு. சோழர்களுடைய கல்லணை 2000 வருஷத்துக்கு முன்னாடி கட்டப்பட்டு இன்னைக்கு வரைக்கும் கம்பீரமா இருக்கு. வீரநாராயண ஏரி 20 கிமீ நீளம், 7 கிமீ அகலம் கொண்டது. அந்த ஏரியைக் கட்டுனது நம்ம சோழன். அஸ்திவாரமே இல்லாம கட்டப்பட்ட நம்ம தஞ்சை பெரிய கோயில் 216 அடி உயரம். வெள்ளைக்காரன்கூட கடலுக்கு வெளியேதான் இருந்தாங்க. கடலுக்குள்ளேயும் போகமுடியும்ன்னு நினைச்சு கடல் தாண்டி போனவங்கதான் நம்ம தமிழர்கள். இன்னைக்கும் தமிழக அரசு பயன்படுத்துற மக்கள் நலத் திட்டங்கள் சோழர்கள் கொண்டு வந்தவை. இன்னும் நிறையா இருக்கு. இதை எல்லாத்தையும் 10 விநாடில படிச்சிட்டு தள்ளிவிட்டுட்டோம். அதைத் திரைப்படம் மாதிரி மணி சார் உருவாக்கியது, அவர் அடுத்தத் தலைமுறைக்குக் கொடுக்கற கிஃப்ட்ன்னு நான் சொல்லுவேன். நம்ம வரலாறு படிக்காம வரலாறு படைக்க முடியாது.
இதுல நான் வந்தியத்தேவன் கதாபாத்திரம் பண்ணிருக்கேன். இதை எங்க அம்மாகிட்ட சொல்றப்போ, ‘என் ப்ரெண்ட்ஸ் எல்லாரும் கல்யாணம் பண்ணா வந்தியதேவன் மாதிரி ஒருத்தனைத்தான் கல்யாணம் பண்ணணும்னு சொல்லுவாங்க’ன்னு சொன்னாங்க. அதைக் கேட்கும்போது ஷாக்காக இருந்தது. அதெல்லாம் மணி சார் பார்த்துபாருன்னு தைரியத்துல போயிட்டேன். என் நண்பர் ஒருவரிடம் வந்தியத்தேவன் பற்றிக் கேட்டேன். வந்தியத்தேவன் ஐ.ஏ.எஸ் ஆபிஸர் மாதிரி. அவனுக்கு நாடே கிடையாது. ஆனால் அவன் இளவரசன், பேராசை கொண்டவன், ஆனா நேர்மையானவன்னு சொன்னாரு. அது எனக்கு அந்தக் கதாபாத்திரத்தைப் புரிஞ்சுக்க உதவியாக இருந்தது. இந்த புக் படிச்ச பலருக்கும் ஒவ்வொரு கற்பனை இருக்கும். இது மணி சாருடைய கற்பனை!” என்று முடித்தார்.