அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பி.எஸ் தரப்பில் தொடர்ந்த வழக்கில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 11 ஆம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற உள்ள நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்கில், பல்வேறு கேள்விகளை எழுப்பிய சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக, இந்த வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில், வெள்ளிக்கிழமை (ஜூலை 8) விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வியாழக்கிழமை உத்தரவிட்டது.
இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் இன்று (ஜூலை 8) தாக்கல் செய்த பதில் மனுவில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவி காலாவதியாகவில்லை. ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இன்னும் இருக்கிறது. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் மட்டுமே பொதுக்குழுவுக்கு நோட்டீஸ் கொடுக்க முடியும் என்றும், அதிமுகவில் பொதுக்குழு தான் அதிகாரம் பெற்ற அமைப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இ.பி.எஸ் தாக்கல் செய்த பதில் மனுவில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியானாலும் கட்சியில் எந்த வெற்றிடமும் ஏற்படாது என்று கட்சி விதி கூறுகிறது. எனவே, தலைமைக் கழக நிர்வாகிகள் பதவியில் நீடிக்கிறார்கள். 2665 பொதுக் குழு உறுப்பினர்களில் 2190 பேர் பொதுக்குழுவுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளனர். ஒட்டுமொத்த பொதுக்குழு உறுப்பினர்களில் 82 சதவீதம் பேர் ஒப்புதல் அளித்திருப்பதால், பொதுக்குழுவுக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இ.பி.எஸ் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியாகவில்லை என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சாதகமாக அமைந்துள்ளது.
முன்னதாக, ஜூலை 11 ஆம் தேதி நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பி.எஸ் மற்றும் வைரமுத்து தனித்தனியே தாக்கல் செய்த வழக்கு, வியாழக்கிழமை (ஜூலை 7) சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமாா், ‘பொதுக் குழுவை நடத்தத் தடையில்லை என்று உத்தரவு பிறப்பித்துள்ள உச்ச நீதிமன்றம், பொதுக் குழுவை சட்டப்படி நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் வேறு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தால், உயா் நீதிமன்றத்தை நாடலாம் என உத்தரவிட்டுள்ளது என்று வாதிட்டாா்.
இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, உச்ச நீதிமன்றம் பொதுக் குழுவை நடத்தலாம் என்று உத்தரவிட்டிருக்கிற நிலையில், உயா் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும்? என்று கேள்வி எழுப்பினாா்.
இதைத் தொடா்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டம் நடைபெறும் என்று, ஜூன் 23-ஆம் தேதி நடந்த பொதுக் குழுவில் அறிவிக்கப்பட்டது. இதுதொடா்பான செய்தி அனைத்து பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளது. ஜூலை 11-ஆம் தேதி பொதுக் குழுக் கூட்டத்தை நடத்தக் கூடாது என்று மனுதாரா் மனுவைத் தாக்கல் செய்த நாள் வரை, பொதுக் குழு தொடா்பான அறிவிப்பு வெளியிட்டு 13 நாள்கள் முடிவடைந்துள்ளது. எனவே, கூட்டம் தொடா்பாக நோட்டீஸ் கொடுக்கவில்லை என கருதக் கூடாது. பொதுக் குழுவுக்கு தடை விதிக்கக் கூடாது’ என வாதிட்டார்.
இதையடுத்து, நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, அதிமுகவில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் பதவிகள் காலாவதியாகிவிட்டதா? பொதுக் குழுவைக் கூட்டுவதற்கு தலைமைக் கழக நிா்வாகிகளுக்கு அதிகாரம் உள்ளதா? எத்தனை நாள்களுக்கு முன் பொதுக் குழுக் கூட்டத்துக்கு அழைப்பு விடுக்க வேண்டும்? பொதுக் குழுவுக்கான அழைப்பிதழில் யாா் கையெழுத்திடுவது? என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினாா்.
இவை தொடர்பாக எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்டு விசாரணையை வெள்ளிக்கிழமை ஒத்திவைத்திருந்தார்.
இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழுவுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் இன்று (ஜூலை 8) எடப்பாடி பழனிசாமி தரப்பில் விரிவான பதில் மனு தாக்கல் செய்யப்பட்டதையடுத்து, 2வது நாளாக இன்று விசாரணை நடைபெற்றது.
அப்போது, எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர் விஜய் நாராயணன் வாதிடுகையில், கட்சி விதிகளை செயற்குழு திருத்த முடியாது, பொதுக்குழுவுக்கே அந்த அதிகாரம் உள்ளது. செயற்குழுவில் திருத்தம் செய்தாலும் அதற்கும் பொதுக்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். செயற்குழுவின் திருத்தத்திற்கு 23ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்கவில்லை. இதனால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியாகிவிட்டது. இதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. பொதுக்குழுவால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்வு செய்யப்படுவர் என இருந்த கட்சி விதியை திருத்த கடந்தாண்டு முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, ஒருங்கிணைப்பாளர்களை அடிப்படை உறுப்பினர்கள் மூலம் தேர்வு செய்ய முடிவெடுக்கப்பட்டது. ஓபிஎஸ் மனுவை நிராகரிக்க வேண்டும். 2 கோடி உறுப்பினர்களை கொண்ட கட்சிக்கு எதிராக ஓ.பி.எஸ் வழக்கு தொடர்ந்துள்ளார். தன்னுடைய எதிர்காலம் கேள்விக்குறியானதால், கட்சியின் எதிர்காலத்தை சிதைக்க ஓ.பி.எஸ் முயற்சி செய்துள்ளார். கட்சியின் ஜனநாயகத்தை ஒரு தனிமனிதர் சிதைக்கப்பார்க்கிறார். வரும் 11ம் தேதி நடக்கும் பொதுக்குழுவுக்கு தடை வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிராகரித்துள்ளது.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு சசிகலா இடைக்கால பொதுச் செயலாளர் ஆனார். அதிமுக தலைமை கழக நிர்வாகிகளே சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக நியமித்தனர். சசிகலாவை இடைக்கால பொதுச்செயலாளராக்க அழைப்பு விடுக்கப்பட்ட பொதுக்குழுவுக்கு தலைமை கழக நிர்வாகிகளே கையெழுத்திட்டனர். அதில் ஓ.பி.எஸ்-ஸும் ஒருவர். சசிகலா சிறைக்கு சென்ற பின்னரே கட்சியில் சிக்கல் ஏற்பட்டது.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாக இருப்பதால் தலைமை கழக நிர்வாகிகள் பெயரில் பொதுக்குழு கூட்டப்படுகிறது. வழக்கமான பொதுக்குழுவிற்கு மட்டுமே 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுக்க வேண்டும். ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தால் அடுத்த 30 நாட்களுக்குள் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும் என்பது விதி. அதற்கு யாருடைய ஒப்புதலும் தேவையில்லை. ஜூன் 23ம் தேதியே அடுத்த பொதுக்குழு ஜூலை 11ல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கடைசி நேரத்தில் அழைப்பு அனுப்பியதாக கூறப்படுவதை ஏற்கமுடியாது.
பொதுக்குழு முடிவெடுக்க விரும்பும் ஒன்றை தனிமனிதர் தடுத்து நிறுத்த பார்க்கிறார். ஓ.பி.எஸ் நடவடிக்கையால் கட்சியினர் அனைவரும் அவருக்கு எதிராக உள்ளனர். அதிமுக.,வின் நலன் தனி நபர் ஒருவரால் பாதிக்கப்பட்டுவிடக் கூடாது. கட்சியின் நலனே முக்கியம். உட்கட்சி சுதந்திரம் உள்ள கட்சிகளில் அதிமுக.வும் ஒன்று.” எனன் வழக்கறிஞர் விஜய் நாராயண் வாதிட்டார்.
தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான 2வது வழக்கறிஞர் எஸ்.ஆர். ராஜகோபால் வாதிடுகையில், “ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம் கூடுவதற்கு ஒட்டுமொத்த பொதுக்குழுவும் சம்மதம் தெரிவித்துள்ளது. பொதுக்குழுவுக்கு எதிராக ஒருங்கிணைப்பாளரே வழக்கு தொடர நீதிமன்றத்தில் முன்கூட்டியே அனுமதி பெற்றிருக்க வேண்டும். முன் அனுமதி இல்லாமல் ஓ.பி.எஸ் தாக்கல் செய்த மனு விசாரணைக்கே உகந்தது அல்ல. எதுவாக இருந்தாலும் அவர் பொதுக்குழுவில்தான் பேசியிருக்க வேண்டும். ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடியது தவறு. ஒட்டுமொத்த பொதுக்குழுவும் சம்மதம் தெரிவித்த பிறகு தனிநபர் எதிர்ப்பது ஏன்? இது கட்சியின் நலனுக்கான வழக்கு அல்ல. தனிநபர் தேவைக்கான வழக்கு. பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்த ஓ.பி.எஸ், ஒருங்கிணைப்பாளர் பதவி காலியாகவில்லை என ஏன் வழக்கு தொடரவில்லை? ஓ.பி.எஸ் கோரிக்கையை ஏற்று, பொதுக்குழுவுக்கு தடை விதித்தால், அவர் ஒருங்கிணைப்பாளராக நீடிப்பதாகிவிடும். ஓபிஎஸ் மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று வாதிட்டார்.
இவர்களைத் தொடர்ந்து, ஓ.பி.எஸ் தரப்பில், வழக்கறிஞர்கள் குருகிருஷ்ண குமார், வழக்கறிஞர் ஸ்ரீராம் ஆஜரானார்கள். அவர்கள் வாதிடுகையில், “2021ல் உட்கட்சி தேர்தல் மூலம் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வாகி தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு ஒப்புதல் வழங்காததால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலி என கூறுவது தவறு. மற்ற நிர்வாகிகளுக்கான தேர்தலுக்கு ஒருங்கிணைப்பாளர்கள் தான் அழைப்பு விடுத்தனர். இவ்வளவு நடந்தபிறகு இரண்டு பதவிகள் மட்டும் காலியானதாக எப்படி கூற முடியும்? ஜூலை 11ம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கான நோட்டீசில் இருபதவிகளும் காலியாக இருப்பதாக கூறப்படவில்லை.
அதிமுக கட்சி விதி திருத்தங்களுக்கு பொதுக்குழுவின் ஒப்புதல் என்பது ஒரு நடைமுறை தான், அது கட்டாயமில்லை. கட்சி விதி திருத்தம் தொடர்பான தீர்மானம் பொதுக்குழுவிற்கு கொண்டுவரப்படவே இல்லை. தீர்மானமே கொண்டுவரப்படாமல் ஒப்புதல் கொடுக்கவில்லை என்றால் எப்படி? இதனால் ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலியானதாக கூறுவதை ஏற்க முடியாது. அதிமுக-வில் தலைவர்கள் உயிரிழந்தால் மட்டுமே பதவிகள் காலியாகும். இ.பி.எஸ் தரப்பு வாதம் முற்றிலும் முரணாக உள்ளது. சிறப்பு, வழக்கம் என எந்தவொரு பொதுக்குழுவையும் ஒருங்கிணைப்பாளர்கள் தான் கூட்ட இயலும், அதுதான் கட்சியின் விதி.
பொதுக்குழு கூட்டுவதற்கு 15 நாட்களுக்கு முன் நோட்டீஸ் கொடுத்து பல முறை பொதுக்குழு கூடியுள்ளது. கட்சியின் நலன் கருதியே நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்; நாங்கள் சொந்த நலனுக்காக மனு தாக்கல் செய்திருப்பதாக கூறுவது ஏற்புடையது அல்ல.” என்று ஓ.பி.எஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தங்கள் வாதங்களை முன்வைத்தனர்.
இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ஜூலை 11 ஆம் தேதி திங்கட்கிழமை காலை 9 மணிக்கு தீர்ப்பளிக்கப்படும் என உத்தரவிட்டு ஒத்திவைத்தார்.
ஜூலை 11 ஆம் தேதி பொதுக்குழு நடைபெற உள்ள அதே நாளில், பொதுக்குழுவுக்கு தடைவிதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் காலை 9 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுக பொதுக்குழு ஜூலை 11 ஆம் தேதி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி ஜூலை 11 ஆம் தேதி திங்கள்கிழமை காலை 9:15 மணிக்கு பொதுக்குழு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“