புதுடெல்லி: மகாராஷ்டிராவில் ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சியமைக்க அழைத்தது தவறு எனக்கூறி, சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா – காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன் சிவசேனா மூத்த தலைவர்களில் ஒருவரான ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அக்கட்சியின் எம்எல்ஏக்கள், பாஜகவுடன் சேர்ந்து தற்போது கூட்டணி ஆட்சி அமைத்துள்ளனர். ெபரும்பாலான எம்எல்ஏக்கள் ஏக்நாத் ஷிண்டே பக்கம் இருப்பதால், உண்மையான சிவசேனா கட்சி எது? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘ஏக்நாத் ஷிண்டேவை ஆட்சி அமைக்க மகாராஷ்டிரா ஆளுநர் அழைப்பு விடுத்தது தவறு; இது சட்டவிரோதமாகும். அதேபோல் சட்டப் பேரவையில் ஏக்நாத் ஷிண்டேவை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த அனுமதித்தது தவறு; இதுவும் சட்டவிரோதம். அரசியலமைப்புக்கு புறம்பானது என்பதால், இந்த நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்’ எனக்கோரியுள்ளார். இதற்கிடையே 16 எம்எல்ஏக்கள் பதவி நீக்கம் தொடர்பான வழக்கு உள்ளிட்டவை திங்கட்கிழமை உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளதால், அன்றைய தினம் உத்தவ் தாக்கரே தாக்கல் செய்த மனுவும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.