விழுப்புரம் அருகே, சொத்துக்காக மனைவியை கொலை செய்துவிட்டு, அவர் தீக்குளித்து தற்கொலை செய்துக் கொண்டதாக கூறி நாடகமாடிய கணவனை போலீசார் கைது செய்தனர்.
புதுப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் செல்லக்கண்ணு – ஞானம்மாள் தம்பதி. இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ள நிலையில் மூவரும் திருமணமாகி வெவ்வேறு இடத்தில் வசித்து வருகின்றனர்.
ஞானம்மாள் பெயரில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி கொடுக்கும் படி செல்லக்கண்ணு கேட்டு வந்ததாகவும் அதனை கொடுக்க மறுத்த ஞானம்மாளிடம் அவர் சண்டையிட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ஞானம்மாள் அவரது வீட்டில் உடல் எரிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். பிரேத பரிசோதனையில் அவரது கழுத்து நெறிக்கப்பட்டது தெரியவந்ததால் சந்தேகமடைந்த போலீசார் செல்லக்கண்ணுவிடம் விசாரணை நடத்தினர்.
அதில் செல்லக்கண்ணு, ஞானம்மாளின் கழுத்தை நெறித்துக் கொலை செய்ததும் அதை மறைக்க சடலத்தை மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தியதும் அம்பலமானது.