கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? – சீமான் கேள்வி.!

அரசு உதவிப்பெறும் சென்னை ஜெயின் கல்லூரியைத் தனியார் கல்லூரியாக மாற்றும் முயற்சியைத் தமிழ்நாடு அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை துரைப்பாக்கத்தில் தமிழ்நாடு அரசின் உதவியுடன் இயங்கி வரும் ஜெயின் கல்லூரியைச் சுயநிதிக் கல்லூரியாக மாற்றி லாபம் சம்பாதிக்கும் நோக்கத்துடன், அக்கல்லூரி நிர்வாகம் செயல்பட்டு வருவது மாணவர்களிடமும், பெற்றோர்களிடமும் மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த ஐம்பது ஆண்டுகளாக தலைநகரில் வாழும் ஏழை, எளிய மாணவர்களின் உயர்கல்விக் கனவினை நிறைவேற்றும் அரும்பணியைப் புரிந்து வரும் கல்வி நிறுவனத்தை சுயநலத்திற்காக முழுக்கத் தனியார் மயமாக்க நினைப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.

கடந்த பல ஆண்டுகளாக ஆசிரியர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களை நியமனம் செய்யாதது, 2020 – 21 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தாதது, தனியார் கல்லூரிக்கு நிகராகக் கட்டணம் வசூலிப்பது என்று கல்லூரி நிர்வாகத்தின் நிதி – நிர்வாக முறைகேடுகள் பலவும் உயர்க்கல்வித்துறை அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்பட்டும், கல்லூரி நிர்வாகத்தின் மீது தமிழ்நாடு அரசு இதுவரை நடவடிக்கை எடுக்காதது ஏன்? 

தனியார் கல்லூரி ஒழுங்காற்றுச் சட்டம் 1976 விதி 14(a) இன் படி இக்கல்லூரிக்குத் தனி அலுவலரை நியமனம் செய்ய உயர்க்கல்வித்துறை பரிந்துரைத்துப் பல மாதங்கள் கடந்தும், இன்றுவரை தனி அலுவலரை நியமனம் செய்யாதது, கல்லூரி நிர்வாகத்தின் முறைகேடுகளுக்கு ஆட்சியாளர்களும் துணைபோகின்றனரோ? என்ற ஐயத்தைக் கல்வியாளர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.

ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் துரைப்பாக்கம் ஜெயின் கல்லூரிக்குத் தனி அலுவலரை நியமித்து, அரசு உதவிபெறும் கல்லூரியாகவே தொடர்ந்திட வழிவகைச் செய்திட வேண்டுமெனவும், கல்லூரி நிர்வாகத்தின் மீதான புகார்களை விசாரித்து உரியச் சட்ட நடவடிக்கை எடுத்திட வேண்டுமெனவும், தேவைப்பட்டால் இக்கல்லூரியை தமிழ்நாடு அரசே ஏற்று நடத்த வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்”.

இவ்வாறு அந்த அறிக்கையில் சீமான் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.