காஷ்மீர்: மத்திய காஷ்மீரின் கந்தர்பால் பகுதியில் உள்ள பால்டால் முகாம் அருகே பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி அமர்நாத் யாத்திரை சென்ற 13 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது.
மாலை 5.30 மணியளவில் திடீர் மேகவெடிப்பு ஏற்பட்டு அதிக கனமழை அந்தப் பகுதியில் பெய்துள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட சமயத்தில் நிலச்சரிவும் உண்டாக, அமர்நாத் கோவிலுக்கு யாத்திரை சென்ற பக்தர்கள் அவதிப்பட்டனர். இதில் சிக்கிய பலர் காணாமல் போயுள்ளனர். முதல்கட்ட தகவலின்படி 13 பேர் வரை வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர் என்றும் 40க்கும் மேற்பட்டோர் காணவில்லை என்றும் சொல்லப்படுகிறது. காயமடைந்த பலர் பால்டலில் அமைக்கப்பட்ட தற்காலிக மருத்துவ முகாம்களில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இந்த அசம்பாவிதத்தால் தற்போதைக்கு அமர்நாத் யாத்திரை நிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளத்திற்கு ‘மேகவெடிப்பு’ தான் காரணம் என்று தகவல் வெளியான நிலையில், அவை உறுதிப்படுத்தபடவில்லை என்று தெரிவித்துள்ளார் வானிலை ஆய்வாளர் ஒருவர். மேலும், மேக வெடிப்பு என்பது ஒரு மணி நேரத்திற்கு 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்யும். ஆனால், அமர்நாத் குகையில் 2.5 செ.மீ.க்கு மேல் மழை இல்லை என்று இந்திய வானிலை ஆய்வுத் துறையின் இயக்குநர் ஜெனரல் எம். மொஹபத்ரா தெரிவித்துள்ளார். “இது மேக வெடிப்பு என்பதை என்னால் உறுதிப்படுத்த முடியவில்லை. இருப்பினும் வட மாவட்டங்களில் அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளது’’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் விளக்கம் அளித்துள்ளார்.