திருவனந்தபுரம்: கேரளாவில் பெய்து வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரமாகி, கடந்த 10 நாட்களாக மாநிலம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக, கண்ணூர், காசர்கோடு, மலப்புரம், கோழிக்கோடு உள்ளிட்ட வட மாவட்டங்களில் மழை அதிகமாக உள்ளது. இந்நிலையில், வரும் 3 நாட்களுக்கு பரவலாக இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று 11 மாவட்டங்களுக்கும், நாளை 9 மாவட்டங்களுக்கும், 11ம் தேதி 10 மாவட்டங்களுக்கும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த மாவட்டங்களில் 24 மணி நேரத்தில் 64.5 மிமீ முதல் 115 மிமீ வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. கண்ணூர், காசர்கோடு மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு நேற்று மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டது. கேரளா முழுவதும் உள்ள பெரும்பாலான ஆறுகளில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இவற்றின் கரையோரங்களில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்பட்டு உள்ளது.