புதுடெல்லி: டெல்லி எய்ம்சில் அனுமதிக்கப்பட்டுள்ள ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவர் லாலு பிரசாத் யாதவின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பீகார் முன்னாள் முதல்வரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவன முறைகேடு வழக்கில் சிக்கி சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். அவருக்கு சிறுநீரக கோளாறு உட்பட பல்வேறு நோய்கள் உள்ளன. இதற்கு சிகிச்சை பெறுவதற்காக சமீபத்தில் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பாட்னாவில் உள்ள தனது வீட்டில் அவர் தவறி விழுந்ததில், உடலில் பல்வேறு இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பாட்னா மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அதில், அவருடைய உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படாததை தொடர்ந்து, கடந்த புதன் கிழமை ஏர்ஆம்புலன்ஸ் மூலமாக படுத்த படுக்கையாக டெல்லி அழைத்துச் செல்லப்பட்டு, எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர் சாதாரண வார்டுக்கு மாற்றப்படுவார் என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி நேற்று மருத்துவமனைக்கு நேரில் சென்று, லாலுவின் உடல்நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.