சிவாஜிகணேசன் குடும்பத்திலும் சொத்து தகராறா : ரசிகர்கள் அதிர்ச்சி

சொத்துத் தகராறு இல்லாத குடும்பமே இல்லை என்று பெரியவர்கள் சொல்வார்கள். பெரிய குடும்பங்களில் அப்படிப்பட்ட தகராறுகள் இருக்காது என்றுதான் பலரும் நினைப்பார்கள். ஆனால், தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பால் கோலோச்சி எண்ணற்ற ரசிகர்களைப் பெற்ற சிவாஜிகணேசன் குடும்பத்தில் சொத்து தகராறு ஏற்பட்டுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

சிவாஜிகணேசன் முன்னணி நடிகராக இருந்த போது பல சொத்துக்களை வாங்கியுள்ளார். அவற்றில் முக்கியமானது சென்னை, ராமாபுரத்தில் உள்ள சிவாஜி கார்டன். சுமார்40 ஏக்கர் விவசாய நிலமாக இருந்த அந்த இடத்தில்தான் தற்போது டிஎல்எப் நிறுவனம் சாப்ட்வேர் நிறுவனங்களுக்காக கட்டிடங்களைக் கட்டியுள்ளது. சில வருடங்களுக்கு முன்பு சிவாஜி குடும்பத்தினர் அந்த இடத்தை விற்றுவிட்டார்கள்.

அது போல சென்னை, அண்ணா சாலையில் உள்ள சாந்தி தியேட்டர் சில வருடங்களுக்கு முன்பு விற்கப்பட்டது. சென்னை, ராயப்பேட்டையில் சிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் செயல்பட்டு வந்த அலுவலகம், சிவாஜியின் சொந்த ஊரான சூரக்கோட்டையில் உள்ள விவசாய நிலங்கள் உள்ளிட்டவைகளும் இதில் அடக்கம். மேலும், தங்க நகைகள் உள்ளிட்டவைகளும் உள்ளதாகத் தெரிகிறது.

பிரபு, ராம்குமார் ஆகிய இரண்டு மகன்கள், சாந்தி நாராயணசாமி, ராஜ்வி கோவிந்தராஜன் ஆகிய இரண்டு மகள்கள் சிவாஜிக்கு இருக்கிறார்கள். இவர்களில் மகள்கள்தான் தற்போது தங்கள் சகோதரர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்திருக்கிறார்கள். சிவாஜி குடும்பத்திலும் இப்படி சொத்துக்காக நீதிமன்றம் படியேறியிருப்பது அவரது ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. நேற்று முதல் சமூக வலைத்தளங்களில் இது குறித்து பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.