மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குறித்து அநாகரீக கருத்து தெரிவித்ததாக வங்காள பா.ஜ.க முன்னாள் தலைவர் திலீப் கோஷ் சுற்றி தற்போது சர்ச்சை தொடங்கியுள்ளது. சமீபத்தில் வங்காள பா.ஜ.க முன்னாள் தலைவர் திலீப் கோஷ் திரிணாமுல் காங்கிரஸ் அரசையும், மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியையும் தரக்குறைவாக விமர்சித்தாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், பாஜக தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திரிணாமுல் காங்கிரஸ் பிரதிநிதிகள் ஆளுநர் ஜக்தீப் தன்கரை சந்தித்தனர். அப்போது,” திலிப் கோஷின் முதல்வர் மம்தா குறித்த கருத்துக்கள் அவமரியாதையானவை. மேலும், அவை பெண்கள் மீதான, பெண்களின் நடத்தையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.
இந்தியாவில் உள்ள பெண்களின் அடிப்படை உரிமைகளைக் காக்க திலீப் கோஷின் கருத்துகளை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். ஒரு பெண்ணின் நாகரீகம் கேள்விக்குறியாகியுள்ள இந்த நேரத்தில் நீங்கள் அமைதியாக இருக்க மாட்டீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். நீங்கள் அரசியலமைப்பை நிலைநிறுத்துவீர்கள் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும் திலீப் கோஷின் இந்த கருத்துகளைக் கண்டிக்கிறோம். திலிப் கோஷ் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் ,” எனத் தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, திலிப் கோஷ் செய்தியாளர் சந்திப்பின் போது,” என்னைக் கைது செய்ய வேண்டும் என்று ஆளுநரின் காலில் விழுகிறது திரிணாமுல் காங்கிரஸ். ஆனால், அதே ஆளுநரை முதல்வர் அவர்களே தரக்குறைவாக பேசி இருக்கிறார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் வெட்கமற்றவர்கள்! திரிணாமுல் காங்கிரஸுக்குத் தைரியமிருந்தால் என்னைக் கைது செய்யட்டும்”எனத் தெரிவித்துள்ளார்.
மேற்குவங்க ஆளுநர் ஜகதீப் தன்கருக்கும், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும் அவ்வப்போது கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு இருவரும் மாறி மாறி குற்றம்சாட்டிக்கொள்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.