மதுராந்தகம்: அச்சிறுப்பாக்கம் அருகே முன்னால்சென்ற லாரி மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் 2 பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர்.
சென்னையில் இருந்து 30 பயணிகளுடன் சிதம்பரம் நோக்கி அரசு பேருந்து ஒன்று நேற்று காலைசென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. பேருந்தை முரளி என்பவர் ஓட்டினார். அச்சிறுப்பாக்கம் அடுத்ததொழுப்பேடு பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனத்தை முந்திசெல்வதற்காக ஓட்டுநர் இடதுபக்கமாக ஏறிச்சென்றதாகவும் அப்போது, இடதுபக்கம் இரும்புக் கம்பிகளை ஏற்றிச்சென்ற லாரிக்கும் வலதுபுறம் வந்த அடையாளம் தெரியாத வாகனத்துக்கும் இடையே இருந்த இடைவெளியில் பேருந்து அதிவேகமாக கடந்துள்ளது.
இதில், எதிர்பாராதவிதமாக இடதுபுறம் சென்ற லாரியின் மீதுஅரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இதில், பேருந்தின் இடதுபுறம் முற்றிலும் உருக்குலைந்தது. பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த பயணிகள் காயமடைந்தனர்.
இதில், சென்னையைச் சேர்ந்த வெங்கடேசன், மணிகண்டன், குரோஷா(43), கடலூர் மாவட்டம் பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த சவுந்தர்யா(21) மற்றும் அடையாளம் தெரியாத 48 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயமடைந்தனர்.
அச்சிறுப்பாக்கம் போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு மேல்மருவத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, மதுராந்தகம் அடுத்த கத்திரிச்சேரியைச் சேர்ந்த ஏகாம்பரம் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை 6 ஆனது.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர்கள் பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.5 லட்சம், படுகாயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.