தங்கத்தை நகையாக வாங்காமல், தங்கப் பத்திரமாக வாங்கினால் இன்னும் லாபம்… எப்படி, எப்படி?

ஒரு முதலீட்டாளரின் முதலீட்டுக் கலவைவில் (Portfolio) 10 முதல் 15% தங்கம் இடம் பெறலாம் என்ற நிதி நிபுணர்களின் கருத்து. நாளைய நிதித்தேவைக்கு தங்கம் சேர்ப்பது அவசியம். எனவே, எவ்வளவு தங்கத்தை வாங்க முடியுமோ, அவ்வளவு வாங்கிவிட வேண்டும் என்று நினைக்கின்றனர் மக்கள். இந்த இரு தரப்பினரும் தனது தங்கத் தேவையைப் பூர்த்தி செய்துகொள்ள தங்கத்தை ஆபரணமாக (Physical Gold) வாங்குவதைவிட டிஜிட்டல் முறையில் வாங்குவது நிறைய லாபம் தரும் விஷயமாக இருக்கும்.

தங்கம்

தங்கத்தை டிஜிட்டலாக வாங்க பல வழிகள் உள்ளன. அதில் ஒன்றுதான் மத்திய அரசாங்கம் வெளியிடும், சாவரீன் கோல்ட் பாண்ட் (Sovereign Gold Bond –SGB) ஆகும்.

கடந்த ஜூன் 20 – 24-ம் தேதிகளில் இந்த சாவரீன் கோல்ட் பாண்டுகள் வெளியிடப்பட்டன. அதற்கடுத்து இனிவரும் ஆகஸ்ட்டில் 22 – 26-ம் தேதிகளில் இந்த பாண்டுகள் வெளியிடப்பட உள்ளன. கடந்த மாதம் இந்த கோல்டு பாண்டில் முதலீடு செய்யத் தவறியவர்கள், இனி ஆகஸ்ட் மாதம் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு கிடைக்கிறது. இந்த கோல்டு பாண்டில் முதலீடு செய்வதற்குமுன், இது குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.

2015-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்ட இந்த தங்கப் பத்திரத் திட்டம் இன்றளவும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. இந்தத் தங்கப் பத்திரம் என்பது இந்திய அரசால் ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்படுவது. இதனுடைய அலகு (Unit) கிராம்களில் உள்ளது.

24 காரட் எனப்படும் சுத்தத் தங்கமானது (Purity 999), ஆபரண தங்கத்தைப்போல் வாங்கும்போதும், விற்கும்போதும் செய்கூலி, சேதாரம் என்று தங்கத்தின் மதிப்பில் கழிவு கிடையாது. இந்திய அரசின் பாதுகாப்பு பெற்றது.

தங்க நகைக்கடை

இந்த முதலீட்டின் காலம் எட்டு ஆண்டுகள். 5 ஆண்டுகளுக்குப் பிறகு, முதலீட்டை விற்று பணமாக்கிக் கொள்ளலாம். முதலீடு முதிர்வடையும் காலத்தில், அன்றைக்கு 24 காரட் தங்கத்தின் விலை என்ன விலையோ, அதே விலை பணமாகக் கிடைக்கும். இத்துடன் முதலீட்டுத் தொகைக்கு ஆண்டு ஒன்றுக்கு 2.5% வட்டி கிடைக்கும். வட்டி தொகை ஆறு மாதத்துக்கு ஒருமுறை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

கடந்த ஜூன் மாதம் இந்த பாண்ட் வெளியிடப்பட்டபோது ஒரு கிராமுக்கான யூனிட் விலை ரூ.5,091-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. வரும் ஆகஸ்ட் மாதம் என்ன விலை பாண்டுகள் விற்கப்படும் என்பது அந்தச் சமயத்தில் அறிவிக்கப்படும்.

1. யாரெல்லாம் இந்த தங்கப் பத்திரத்தில் முதலீடு செய்யலாம்?

அன்னிய செலாவணிச் சட்டம் 1999-ன்படி, இந்தியாவில் வசிக்கும் தனிநபர்கள், கூட்டுக் குடும்பத்தினர், டிரஸ்டுகள், தர்ம ஸ்தாபனம் முதலானோர் முதலீடு செய்யலாம்.

2. முதலீட்டுக்கு வரம்பு உண்டா?

உண்டு, தனிநபர் ஒருவர் ஒரு நிதியாண்டில் 1 கிராம் முதல் 4 கிலோ வரை முதலீடு செய்யலாம். இதேபோல, கூட்டுக் குடும்பத்தினருக்கும் வரம்பு 4 கிலோ வரை முதலீடு செய்து வாங்கலாம். டிரஸ்டுகள் போன்றவை 20 கிலோ வரை முதலீடு செய்யலாம். அதாவது, ஒரு நிதியாண்டில் பல வரிசைகளில் தங்கப்பத்திரம் வெளியிடப்பட்டாலும், அனைத்துக்கும் சேர்த்து ஒரு நிதியாண்டுக்கான மொத்த உச்ச வரம்புதான் 4 கிலோ மற்றும் 20 கிலோ. இதே வரம்புக்கு உட்பட்டு ஒவ்வொரு நிதியாண்டிலும் 5 கிலோ / 20கிலோ வரை முதலீடு செய்யலாம்.

தங்கப் பத்திரம் முதலீடு

3. குடும்ப உறுப்பினர் ஒவ்வொருவரும் 4 கிலோ அளவுக்கு முதலீடு செய்யலாமா?

செய்யலாம். இணைந்தும் வாங்கலாம். வரம்பு மாறது. மைனர் பெயரில் காப்பாளர் (Guardian) வாங்கலாம்.

4. இந்தப் பத்திரத்தை வாங்க பணம் செலுத்துவது எப்படி?

ரூ.20,000 வரை ரொக்கமாகவும், அதற்கு மேற்பட்ட தொகை வங்கி வரைவு டிஜிட்டல் முறை மூலமும் செலுத்தலாம்.

5. ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா?

ஆன்லைனில் விண்ணப்பித்து, டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தினால் கிராமுக்கு ரூ.50 தள்ளுபடி கிடைக்கும்.

6. பத்திர விற்பனைக்கான அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் யார்?

தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள், அட்டவணையிடப்பட்ட தனியார் வங்கிகள், இதற்கென நியமிக்கப்பட்ட அஞ்சல் அலுவலகங்கள், இந்திய பங்குப் பத்திர நிறுவனம் (Stock Holding Corporation of India Ltd.) அனுமதிக்கப்பட்ட பங்குப் பரிவர்த்தனையகங்கள் முதலானவற்றிடமிருந்து இந்த பாண்டுகளைப் பெறலாம்.

7. தங்கத்தின் விலை எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

தங்கப்பதிரம் விற்பனைக்கு வருவதற்கு மூன்று நாள்களுக்கு முன்பு இந்திய உலோகம் மற்றும் ஆபரண வியாபாரிகள் சங்கம் (999) சுத்தத் தங்கத்துக்கு நிர்ணயம் செய்யும் விலையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.

தங்கம் விலை

8. தங்கத்தின் விலையை ரிசர்வ் வங்கி அறிவிக்குமா?

தங்கப்பதிரம் வெளியிடுவதற்கு இரண்டு நாள்களுக்குமுன், ரிசர்வ் வங்கி தங்கத்தின் விலையை தனது வலைதளத்தில் வெளியிடும்.

9. முதிர்வுத் தேதியில் முதலீட்டாளருக்கு என்ன கிடைக்கும்?

முதிர்வுத் தேதிக்கு மூன்று நாள்களுக்கு முன், இந்திய உலோகம் மற்றும் ஆபரண வியாபாரிகள் சங்கம் (Indian Bullion and Jewellers Association Ltd.) குறிப்பிட்டிருந்த விலையின்படி, இந்திய ரூபாயில் பணம் கிடைக்கும். வட்டியும், முதிர்வுத் தொகையும் தங்கப்பத்திரம் வாங்கும்போது குறிப்பிட்டிருந்த வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

10. முதிர்வுத் தொகைக்கான நடைமுறை என்ன?

முதலீடு, முதிர்வு பெறுவதற்கு ஒரு மாதம் முன்பே முதலீட்டாளருக்குத் தகவல் தரப்படும். வங்கிக் கணக்கு எண், இமெயில் முகவரி போன்றவற்றில் மாற்றம் இருந்தால், தொடர்புடைய வங்கி, அஞ்சலகம் முதலானவற்றுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்.

11. எப்போது வேண்டுமானாலும் பத்திரத்தை பணமாக்கிக் கொள்ள முடியுமா?

முதிர்வுக்காலம் 8 ஆண்டுகள் என்றாலும் 5 வருடத்துக்கு பிறகு பணமாக்கலாம். தகுதியுள்ள முதலீட்டாளருக்கு மாற்றம் செய்யலாம். டீ-மேட் படிவத்தில் இருப்பின் பரிமாற்றத்தில் வர்த்தகம் செய்யலாம்.

தங்கம்

12. முதிர்வுக்கு முன்பே முதலீட்டிலிருந்து வெளியேறுவது எப்படி?

முதிர்வுக்கு 30 நாள் முன்பே தொடர்புடைய வங்கி, அஞ்சலகம் முதலானவற்றை அணுக வேண்டும். குறைந்தபட்சம் ஒரு நாள் முன்பாவது வங்கி/அஞ்சலகத்தை அணுகினால் மட்டுமே, முன் முதிர்வுத் தொகை வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

13. தங்கப் பத்திரத்தை நண்பர்/உறவினர் போன்றவர்களுக்கு அன்பளிப்பாகத் தர முடியுமா?

செய்யலாம். அரசு பத்திர விதி 2006 (Govt. Securities Act) மற்றும் பத்திர ஒழுங்குமுறை 2007 (Govt. Securities Regulations) நடைமுறைப்படி அன்பளிப்பு செய்யலாம்.

14. தங்கப்பத்திரத்தை அடமானமாக வைத்து கடன் பெற முடியுமா?

வங்கி, நிதி நிறுவனங்கள், வங்கிசாரா நிதி கம்பெனிகள் முதலானவற்றில் அடமானம் வைத்து கடன் பெறலாம்.

15. இந்த முதலீட்டுக்கு வாடிக்கையாளர் (Other Customer Service) சேவை தரும் நிறுவனங்கள் எவை?

பத்திரம் வாங்கிய பிறகு, வங்கிகள்/அஞ்சலகம்/பங்கு பரிவர்த்தனை நிறுவங்கள்/முகவர்கள் என யாரிடம் பத்திரம் வாங்கினோமோ, அவர்கள் மூலம் சேவை கிடைக்கும்.

கோல்டு பாண்டு

16. நாமிநேஷன் வசதி உண்டா?

அரசு பத்திர விதி 2006 மற்றும் பத்திர ஒழுங்குமுறை 2007-ன்படி நாமினேஷன் உண்டு. விண்ணப்பப் படிவத்துடன் நாமிநேஷன் படிவம் இணைக்கப்பட்டுள்ளது.

17. தங்கப் பத்திரத்தை வர்த்தகம் (Trade) செய்ய முடியுமா?

முடியும் டீ மேட் முடிவிலான தங்கப்பதிரத்தை ரிசர்வ் வங்கி அறிவிக்கும் தேதியிலிருந்து வர்த்தகம் செய்யலாம்.

18. முதலீட்டாளர் இறந்து போனால்?

* நாமினி (அல்லது நாமினிகள்) தொடர்புடைய அலுவலகத்தை அணுகி அரசு பத்திர விதி நடைமுறைப்படி பணம் பெறலாம். நாமினேசன் இல்லாத நேர்வில் வாரிசுரிமைச் சான்றின்படி தொகை கிடைக்கும்.

19. பகுதிப் பணம் பெற முடியுமா?

முடியும். தங்கப்பத்திரத்தில் எத்தனை கிராம் முதலீடோ, அதில் முழு ஒரு கிராம் அளவில் எத்தனை கிராமுக்கு வேண்டுமானாலும், பகுதி பணத்தைப் பெறலாம்.

20. வருமான வரிச் சலுகை தொடர்பாகக் கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன?

முதிர்வுத் தொகைக்கு மூலதன ஆதாய வரி கிடையாது. ஆனால், 2.5% வீதம் தரப்படும் வட்டிக்கு வரி உண்டு. ஆனால், வரிப்பிடித்தம் (TDS) கிடையாது. முதலீட்டாளர் வட்டித்தொகையை இதர வருமானம் என தாமே கணக்கிட்டு வரி செலுத்த வேண்டும்.

999.9 தூய தங்கம்

21. இதில் ரிஸ்க் உண்டா?

குறைந்தபட்சம் 5 வருடத்துக்குப் பிறகுதான் முதிர்வு செய்ய முடியும். அந்தச் சமயத்தில் தங்கம் கிராம் என்ன விலையோ, அந்த அடிப்படையில் தொகை கிடைக்கும்.

இதுவரை 37 வரிசைகளில் தங்கப்பதிரம் வெளியிடப்பட்டு விட்டது. 2022-23-க்கான முதல் வரிசை ஜூன் 24, 2022 அன்று நிறைவடைந்துவிட்டது. அடுத்த வரிசை விற்பனை 22.08.2022 தொடங்க இருக்கிறது. முதலீட்டாளர்கள் தனது சந்தேகங்கள்/புகார்களுக்கு [email protected]ல் ரிசர்வ் வங்கியை அணுகலாம்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.