10 லட்சத்துக்கு 2 கிலோ தங்கமா? பேராசையால் ரூ.5 லட்சத்தை இழந்த உணவக உரிமையாளர்

2 கிலோ தங்கம் 10 லட்சம் ரூபாய் எனக்கூறி போலி தங்கத்தை கொடுத்து ஏமாற்றிச் சென்ற வடமாநில மோசடி நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
சென்னை ஆலந்தூர், வேதகிரி தெருவைச் சேர்ந்தவர் மணி (55), இவர் படப்பையில் உணவகம் நடத்தி வருகிறார். இந்நிலையில், உணவகத்தில் சாப்பிட வந்த வடமாநில இளைஞர் ஒருவர், மணியிடம் 2 கிலோ தங்க உருண்டை என்னிடம் உள்ளது. எனக்கு அவசர பணத்தேவை இருப்பதால் 10 லட்சம் ரூபாய் கொடுத்தால் 2 கிலோ தங்கத்தை உங்களுக்கு தருகிறேன் என ஆசை வார்த்தை கூறியுள்ளார்.
இதனை நம்பிய மணி, சாம்பிள் தங்கத்தை பரிசோதித்ததில் அசல் தங்கம் என உறுதியானதால், பேராசையில் 10 லட்சம் இல்லை, 5 லட்சம் தான் இருப்பதாகக் கூறி நகையை வாங்கிக் கொள்ள சம்மதித்துள்ளார்.
image
அதன் பேரில் வடமாநில இளைஞர் குரோம்பேட்டை நியூ காலனிக்கு மணியை வரவழைத்து, 5 லட்சம் ரூபாய் பணம், 3.5 சவரன் தங்க நெக்லஸ் ஆகியவற்றை வாங்கிக் கொண்டு, 2 கிலோ தங்க உருண்டைகளை கொடுத்துள்ளார்.
இதையடுத்து 2 கிலோ தங்கத்தை வாங்கிய மகிழ்ச்சியில் அதை அடகு கடைக்கு எடுத்துச் சென்று பரிசோதித்துள்ளார். அப்போது அத்தனையும் போலி என தெரியவந்தது.
இதனையடுத்து ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மணி, குரோம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.