ராமநாதபுரம்: தமிழகத்தை எக்காலத்திலும், எக்காரணத்தை கொண்டும் இரண்டாக பிரிக்கப்படக் கூடாது என முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
ராமநாதபுரத்தில் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளது.எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளைகள் நடைபெற்று வருகின்றன.
எக்காலத்திலும், எக்காரணத்தைக் கொண்டும் தமிழகம் இரண்டாக பிரிக்கப்படக் கூடாது. ஒரு தமிழராக 50 ஆண்டுகளாக இசை உலகில் மாமனிதனாக உள்ள இளையராஜாவுக்கு நியமன எம்பி கொடுத்து பிரதமர் நரேந்திர மோடி கவுரவப்படுத்தியுள்ளார். அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து அதிமுகவினர் முடிவு எடுக்க வேண்டும்.
அதிமுகவில் தற்போது நடந்து வரும் உள்கட்சி பிரச்சினைக்கு இரு தரப்பினரும் சுமூகமாக பேசி முடிவு செய்து, களத்தில் நின்றால் அதிமுக மிகப்பெரிய சக்தியாக உருவெடுக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில பொதுச் செயலாளர் பொன்.பாலகணபதி, மாவட்ட தலைவர் கதிரவன், மாவட்டப் பொருளாளர் தரணி முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.