டெல்லி: ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ, ஏர்டெல், வோடபோன் நிறுவனங்களுக்கு போட்டியாக கவுதம் அதானி குழுமம் தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் கால் பதிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. செல்போன் அலைக்கற்றை மற்றும் 5ஜி சேவைகளுக்கு உரிமம் பெறுவதற்கான ஏலம் இந்த மாதம் 26ம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், நேற்று வரை மொத்தம் 4 நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. முகேஷ் அம்பானியின் ஜியோ, மிட்டிலின் ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவனங்கள் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது. 4வது நிறுவனம் தேசிய மற்றும் சர்வதேச அளவிலான உரிமம் பெற்ற நிறுவனம் என்பதால் அது அதானி குழுமமாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. என்றாலும் விண்ணப்பித்த நிறுவனங்களின் பெயர்கள் ஜூலை 12ம் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட உள்ளன. 4 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 72 ஆயிரத்து 97 அலைக்கற்றைகள் இந்த மாதம் 26ம் தேதி ஏலம் விடப்படவுள்ளன. இந்த அலைக்கற்றைகள் 600 மெகா ஹட்ஸ் முதல் 2300 மெகா ஹட்ஸ் வரையிலான அலை வரிசையில் வழங்கப்பட இருக்கின்றன. இவற்றிற்கான உரிமம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். கொரோனா காலத்தில் ஒட்டுமொத்த நாடே பொருளாதாரத்தில் நசிந்த நேரத்தில் உலக பணக்காரர்கள் வரிசையில் இடம்பிடித்த அதானி, தொலைத்தொடர்பு வர்த்தகத்தில் கால் பதிப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.