திருச்சி சுங்கச் சாவடியில் சசிகலா காரின் கண்ணாடி மீது தானியங்கி தடுப்பு விழுந்து கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், ஆதரவாளர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
அரசியல் பயணமாக சசிகலா தனியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, சசிகலா நேற்று சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் அவர் கார் கடந்த போது தானியங்கி தடுப்பு, காரின் கண்ணாடி மேல் பட்டதால் காரின் முன்பக்க கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது. இதனால் சசிகலாவுடன் 5 காரில் வந்தவர்கள் காரை விட்டு இறங்கி சுங்கச்சாவடி ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
தகவலறிந்த சசிகலாவின் ஆதரவாளர்கள், 20க்கும் மேற்பட்டோர் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டதோடு, போக்குவரத்தையும் தடைச் செய்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த துவாக்குடி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம், சப்- இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடி அதிகாரிகளும் ‘எதிர்பாராத விதமாக நடந்து விட்டதாக’ கூறி சமாதானம் செய்தனர். இதனைத்தொடர்ந்து சசிகலாவும், அவரது ஆதரவாளர்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
துவாக்குடி சுங்கச்சாவடியை பொறுத்தவரை அங்கு வரும் விஐபிக்கள் 11ம் எண் பாதை வழியாக அனுப்பி வைத்து விடுவார்கள். ஆனால் சசிகலா அந்த வழியாக செல்லவில்லை. கட்டணம் செலுத்தும் வழியாக வந்ததால் தானியங்கி தடுப்பு, கார் கண்ணாடி மீது லேசாக பட்டுள்ளது. இதற்கு சசிகலாவின் காரில் இருந்த FAST TAG சரியாக ஸ்கேன் ஆகாமல் இருந்திருக்கலாம் அல்லது ரீசார்ஜ் செய்யாதது தான் காரணமாக தானியங்கி தடுப்பு கீழே இறங்கியிருக்கலாம் என காவல்துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிக்கலாம்: தேனி: ரோந்து பணியின்போது சிக்கிய 1 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM