அ.தி.மு.க-வின் துணை ஒருங்கிணைப்பாளரான கே.பி.முனுசாமி, “ஓ.பி.எஸ் உடன் அரசியல் பயணித்தோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாக இருக்கிறது” என ஓ.பி.எஸ்-ஸை வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.
சென்னை பசுமை வழிச்சாலையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த கே.பி.முனுசாமி, “நேற்று கோவை செல்வராஜ், நான் தி.மு.க நிர்வாகிகளோடு தொடர்பு வைத்திருப்பதாகவும், அதனடிப்படையில் கிருஷ்ணகிரி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய இணையத்தில் இருக்கின்ற இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்-கை 99 ஆண்டுகளுக்கு எனது மகன் பெயரில் நான் லீஸ் எடுத்திருப்பதாகவும், அது தி.மு.க ஆட்சியில் எனக்கு கிடைக்கப்பெற்றதாகவும் குற்றச்சாட்டைக் கூறி, திமுவு-க்கு துதிபாடாமல் ஒழுங்காக அ.தி.மு.க-வுக்கு செயல்பட வேண்டும் என்று எனக்கு அறிவுரை கூறியுள்ளார். இந்த அறிவுரை கூறியது அவரில்லை, அவர் அம்பு தான். அதை எய்தியவர் யாரென்று சொன்னால் அது அண்ணன் ஓ.பன்னீர்செல்வம். அண்ணன் பன்னீர்செல்வத்தின் தூண்டுதலின்பேரில் அவர் இந்த கருத்தைச் சொல்லியிருக்கிறார்” என்று கூறினார்.
மேலும் கொடநாடு கொலை வழக்கு தொடர்பாகப் பேசிய கே.பி.முனுசாமி, “ஓ.பன்னீர்செல்வத்திடத்தில் கேட்கிறேன், நான்கரை ஆண்டுகாலம் அவரோடு(இ.பி.எஸ்) துணை முதலமைச்சராகப் பயணித்தீர்கள். அப்போது இந்த சிந்தனை வரவில்லையா? இப்போது நீங்கள் தவறு செய்துவிட்டு, கழக தொண்டர்களும், பொதுமக்களும் வெறுத்து ஒதுக்குகின்ற இந்த சூழ்நிலையில், எங்களுடைய நற்பெயரையும் கெடுப்பதற்காக இதுபோன்ற கருத்துக்களைச் சொல்வதற்கு, நீண்டகாலமாக உங்களோடு அரசியல் பயணித்த என்னைப் போன்றோருக்கு வேதனையாக இருக்கிறது. தங்களோடு பயணித்தோம் என்பதை நினைக்கும்போது வெட்கமாகவும் இருக்கிறது” எனக் கூறினார்.
அதைத்தொடர்ந்து கே.பி.முனுசாமியிடம், எடப்பாடி தலைமையில் கட்சித் தலைமை வந்த பின்னர் ஓபிஎஸ் மீது கட்சி விரோத நடவடிக்கை எடுக்கப்படுமா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது “இது ஒரு ஜனநாயக அமைப்புள்ள இயக்கம். இந்த இயக்கத்தில் ஜனநாயக முறைப்படிதான் எல்லாவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படும்” என கே.பி.முனுசாமி பதிலளித்தார்.
அதிமுக ஒற்றைத்தலைமை விவகாரம் தொடர்பான வழக்கில் வரும் 11-ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அன்றுதான் அ.தி.மு.க-வின் செயற்குழுவும் நடத்தவிருப்பதாக அ.தி.மு.க முன்னமே அறிவித்திருந்தது.