இலங்கையில் அதிபர் மாளிகைக்குள் நுழைந்து மக்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து அதிபர் மாளிகையில் இருந்து ஆம்புலன்ஸ் வழியாக கோத்தபயா ராஜபக்சே தப்பியோடியாக தகவல் வெளியாகியுள்ளது. வன்முறையை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக அனைத்து கட்சிகளுக்கு அவசர அழைப்பு விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்றத்தையும் உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டுள்ளார்.
கடும் பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இலங்கை அதிபர் கோத்தபயா ராஜபக்சே பதவி விலகக் கோரி தலைநகர் கொழும்புக்கு இன்று காலை 8 மணி முதல் பேருந்து, ரயில் மற்றும் கண்டெய்னர் லாரிகள் மூலம் ஆயிரக்கணக்கானோர் அலை அலையாய் திரண்டனர்.
போராட்டக்காரர்கள் முன்னோக்கி செல்வதை தடுக்கும் வகையில் சிறப்பு அதிரடிப் படையினர் அமைந்திருந்த தடுப்புகளை உடைத்தெறிந்து அதிபர் மாளிகைக்குள் நூற்றுக்கணக்கானோர் நுழைந்தனர். சிறப்பு அதிரடி படையினர் போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சி அடித்தும் விரட்டியடிக்க முயன்றதால் வன்முறையாக வெடித்தது.
ஆம்புலன்ஸ் வழியாக அதிபர் கோத்தபயா ராஜபக்சே தப்பித்து செல்வதாக தகவல் வெளியான நிலையில், அதிபர் மாளிகையில் இருந்து வெளியே வந்த ஆம்புலன்சை போராட்டக்காரர்கள் தடுத்து நிறுத்தி சோதனையிட முயற்சித்தனர். அப்போது அங்கு வந்த சிறப்பு அதிரடி படையினர் ஆம்புலன்சில் முதியவருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாகக் கூறி போராட்டக்காரர்களிடம் இருந்து மீட்டு அந்த வாகனத்தை அனுப்பி வைத்த நிலையில், அந்த ஆம்புலன்ஸில் கோத்தபயா ராஜபக்சே, தனது குடும்பத்தினருடன் தப்பித்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போராட்டத்தில் எதிர்க்கட்சி எம்பி ரஜிதா சேனரத்னாவை போராட்டக்காரர்கள் கடுமையாக தாக்கினர். முகம் முழுவதும் ரத்த காயமடைந்த அவரை போராட்டக்காரர்களிடம் இருந்து போலீசார் பத்திரமாக அழைத்து சென்றனர்.
இதனிடையே கொழும்பு காலி முகத்திடலில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்பதற்காக நகரின் பல்வேறு இடங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் அலை அலையாய் பேரணியாக திரண்டனர். தன்னெழுச்சியான போராட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் மற்றும் தனியார் தொண்டு நிறுவனங்களும் ஆதரவு தெரிவித்து அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துள்ளன.
மக்களின் போராட்டம் வன்முறையாக மாறியுள்ளதை அடுத்து அனைத்து கட்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே, நாடாளுமன்றத்தையும் உடனடியாக கூட்டுமாறு சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி கேட்டுக் கொண்டுள்ளார்.