தமிழகத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கான இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேனி மாவட்டத்தில் பெரியகுளம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், 3 ஆவது வார்டு உறுப்பினர், டி.வாடிப்பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 3 ஆவது வார்டு உறுப்பினர், பெரியகுளம் நகராட்சியில் 26 ஆவது வார்டு உறுப்பினர், ஆண்டிபட்டி ஒன்றியத்தில் ரெங்கசமுத்திரம் கிராம ஊராட்சியில் 1 ஆவது வார்டு, மொட்டனூத்து கிராம ஊராட்சியில் 8 ஆவது வார்டு உறுப்பினர், கடமலை – மயிலை ஒன்றியத்தில் முத்தலாம்பாறை ஊராட்சியில் 6 ஆவது வார்டு, தும்மக்குண்டு ஊராட்சியில் 7 ஆவது வார்டு, சின்னமனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சின்னஓவுலாபுரம் ஊராட்சியில் 7 ஆவது வார்டு உறுப்பினர் என மொத்தம் 9 பதவிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வெளியானது.
இதில் நீதிமன்ற தடை உத்தரவால் பெரியகுளம் நகராட்சிக்கு உட்பட்ட 26 ஆவது வார்டு உறுப்பினருக்கான தேர்தல் ரத்தானது. ஆண்டிபட்டி ஒன்றியத்தில் உள்ள மொட்டனூத்து, ரெங்கசமுத்திரம், கடமலை – மயிலை ஒன்றியத்திற்கு உட்பட்ட முத்தலாம்பாறை, தும்மக்குண்டு மற்றும் வடபுதுப்பட்டி ஊராட்சியில் 3 ஆவது வார்டு உறுப்பினர் ஆகிய 5 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். எஞ்சியுள்ள வடபுதுப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர், டி.வாடிப்பட்டி ஊராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் சின்னஓவுலாபுரம் ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 3 இடங்களுக்கு மட்டும் இன்று தேர்தல் நடைபெறுகிறது.
இதில் வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 10 பேர், டி.வாடிப்பட்டி 3 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு 2 பேர், சின்னஓவுலாபுரம் 7 ஆவது வார்டு உறுப்பினர் பதவிக்கு 3 பேர் என மொத்தம் 15 பேர் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 9,872 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இதற்காக 14 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, அங்கு கண்காணிப்பு கேமிராக்கள் மூலம் வாக்குப்பதிவுகள் கண்காணிக்கப்படுகின்றன. மேலும் பதற்றமான 6 வாக்குச்சாவடி மையங்களில் கூடுதலாக கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வாக்குப்பதிவிற்காக மாவட்டத்தில் 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கொரோனா நோய் பரவல் காரணமாக வாக்குச்சாவடி மையத்திற்கு வரும் வாக்காளர்கள் கட்டாய முக கவசம், உடல் வெப்பநிலை பரிசோதனை, கிருமி நாசினி மருந்துகள் உள்ளிட்ட சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றனர்.
வடபுதுப்பட்டி ஊராட்சி தலைவருக்கு அரசு நில மோசடி வழக்கில் கைதானவர் போட்டி
திமுக தேனி நகரப் பொறுப்பாளராக இருந்தவர் பாலமுருகன். இவரின் மனைவி ரேணுப்பிரியா வடபுதுப்பட்டி ஊராட்சி மன்ற தலைவராக இருந்தார். உள்ளாட்சி தேர்தலின்போது தேனி-அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவிக்கு பாலமுருகன் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகள் நடந்துவந்தது. ஆனால் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால், ஊராட்சி தலைவரான தனது மனைவி ரேணுப்ரியாவை ராஜினாமா செய்யவைத்து, நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட வைத்து வென்றார்.
இதையடுத்து நகராட்சி தலைவர் பதவி கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டு, அதைவிட்டுக் கொடுக்காததால் பாலமுருகன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இருப்பினும் பல்வேறு பிரச்னைகளுக்கு இடையே ரேணுப்ரியாவே தலைவராக தொடர்ந்து வருகிறார். இதனிடையே வடபுதுப்பட்டி ஊராட்சியில் 3 ஆவது வார்டு உறுப்பினர் பிரகாஷ் உயிரிழந்தார். இதனால் ஊராட்சி தலைவர் மற்றும் 3 ஆவது வார்டு உறுப்பினருக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க., முன்னாள் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்னப்பிரகாஷ் இதே வடபுதுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசு நிலங்களை தனிநபர்களுக்கு பட்டா போட்டு, அந்த நிலத்தில் உள்ள கனிமவளத்தை கொள்ளையடித்து தொடர்பான வழக்கில் கைதாகி தற்போது ஜாமீனில் உள்ளார்.
இந்நிலையில் ஊராட்சி தலைவர் பதவிக்கு அன்னப்பிரகாஷ், சசிக்குமார், ஞானமுருகன் உட்பட 13 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். மூன்று பேர் வேட்பு மனுக்களை வாபஸ் பெற்றனர். இதனால் ஒரு பெண் உட்பட 10 பேர் போட்டியிடுகின்றனர். அ.தி.மு.க தரப்பில் அன்னப்பிரகாஷூம், தி.மு.க தரப்பில் ஞானமுருகன் என்பவரும் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கிடையே தான் போட்டி கடுமையான உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் அன்னப்பிரகாஷ் அரசு நில மோசடி வழக்கில் தான் இழந்த செல்வாக்கை மீட்டெடுக்க கண்டிப்பாக இத்தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கில் களம்கண்டுள்ளார். வரும் ஜூலை 12 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெற உள்ளது.