புது நோட்டு முத்துசாமி.. மொத்த நோட்டையும் பறிகொடுத்த சோகம்..! வீடு தேடி வரும் கொள்ளையர்..

திருச்சி மாவட்டம் முசிறி  அருகே ஓய்வு பெற்ற வங்கி காசாளரை கடத்திச்சென்று வீட்டுச்சாவியை பறித்து மொத்த பணத்தையும் கொள்ளையடித்த சம்பவம் அரங்கேறி உள்ளது. வீட்டு வேலைக்கு வருவோருக்கு புது ரூபாய் நோட்டுக்கள் கொடுத்ததால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு..

திருச்சி மாவட்டம் முசிறி அடுத்த தா. பேட்டையை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி காசாளர் முத்துச்சாமி என்பவர் தான் கிட்னாப் கொள்ளையர்களிடம் மொத்த பணத்தையும் பறி கொடுத்தவர்.

63 வயதான முத்துச்சாமி கனரா வங்கியில் காசாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவத்தன்று வளையெடுப்பு கிராமத்தில் வசிக்கும் உறவினரை பார்த்துவிட்டு மொபட்டில் வீடு திரும்பிய போது மர்ம நபர்கள் முத்துச்சாமியை தாக்கி கண்களை கட்டி காரில் தூக்கிப் போட்டு கடத்திச் சென்றுள்ளனர்.

காட்டுப்பகுதியில் உள்ள கொட்டகை ஒன்றில் அவரை அடைத்து வைத்து வீட்டுச்சாவியையும் , பீரோ சாவியையும் கேட்டு அடித்து மிரட்டி உள்ளனர். அவரிடம் பெற்ற சாவிகளை கொண்டு நள்ளிரவு முத்துச்சாமியின் வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த பீரோவில் இருந்து 12 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம், 6 சவரன் நகைகளை கொள்ளையடித்துவிட்டு வந்து, முத்துச்சாமியை கண்ணை கட்டி சிக்கதம்பூர் பகுதியில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர்.

போலீசில் சொன்னால் தீர்த்துக் கட்டிவிடுவோம் என்று கூறியதால் போலீசுக்கு செல்லாமல் காயத்துக்கு சிகிச்சை மேற்கொள்ள தா.பேட்டை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்குள்ள மருத்துவர்கள் முத்துச்சாமிக்கு நடந்த சம்பவம் தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விரைந்து வந்து முச்சாமியிடம் விசாரித்து கடத்தல் கொள்ளையர்கள் குறித்து தேடுதல் வேட்டையை தொடங்கினர்.

கைரேகை மற்றும் மோப்ப நாய் உதவியுடன் துப்பு துலக்க முயன்ற போலீசார் கொள்ளையன் ஏற்கனவே வீட்டிற்கு வந்து சென்றவன் என்று சந்தேகித்தனர் அதன் அடிப்படையில் முத்துச்சாமி வீட்டிற்கு வெல்டிங் வேலைக்கு வந்து சென்ற ராஜா என்பவரை பிடித்து விசாரித்த போது புது நோட்டால் உதித்த கொள்ளை திட்டம் வெளிச்சத்துக்கு வந்தது.

முத்துச்சாமி தனது வீட்டில் வேலை முடித்து செல்வோருக்கும், வட்டிக்கு பணம் பெறுவோருக்கும், புத்தம் புது ரூபாய் நோட்டுக்களை கொடுப்பதை வழக்கப்படுத்தி உள்ளார். மேலும் தன்னிடம் இருக்கும் பணம் முழுவதும் புது ரூபாய் நோட்டுக்கள் தான் என்று பெருமை பேசி உள்ளார்.

இதனை கவனித்த வெல்டிங் ராஜா , முத்துச்சாமியிடம் லட்சக்கணக்கில் பணம் இருக்கும் என்று கணித்துள்ளான். இந்த நிலையில் கூட்டாளி திவாகர் கடன் கேட்டதால் கூட்டாளிகளுடன் சேர்ந்து முத்துச்சாமியை கடத்தி கொள்ளை யடித்தது தெரியவந்தது.

பாறை இடுக்கில் மறைத்து வைத்திருந்த 1 லட்சத்து 7 ஆயிரம் ரூபாயை மீட்ட போலீசார் , கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை தேடி வருகின்றனர்.

செல்வந்தர்கள் தங்களிடம் இருக்கும் பணம் குறித்து வெளியாட்களிடம் தம்பட்டம் அடித்தால் என்ன மாதிரியான சம்பவம் நடக்கும் என்பதற்கு இந்த சம்பவம் ஒரு உதாரணம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.