சென்னை: சென்னையில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் பணிகளைக் கண்காணிக்க பொறியாளர்களை நியமித்து சென்னை மாநகராட்சி ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சிங்கார சென்னை 2.0 பகுதி 1, பகுதி 2, மூலதன நிதி, வெள்ளத் தடுப்பு நிதி, உட்கட்டமைப்புகள் மற்றும் வசதிகள் நிதி ஆகிய திட்டங்களின் கீழ் ரூ.608.24 கோடி மதிப்பில் 179.45 கி.மீ நீளத்திற்க்கும், உலக வங்கி நிதி உதவியுடன் ரூ.120 கோடி மதிப்பில் 44.88 கி.மீ நீளத்திற்க்கும், கொசஸ்தலையாறு வடிநிலப்பகுதிகளில் ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவியுடன் ரூ.3220 கோடி மதிப்பில் 769 கி.மீ நீளத்திற்கும், கோவளம் வடிநிலப்பகுதிகளில் ஜெர்மன் பன்னாட்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.1714 கோடி மதிப்பில் 360 கி.மீ நீளத்திற்கும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்தப் பணிகளைக் கண்காணிக்க 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து தமிழக ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. மேலும், கடந்த காலங்களில் பருவமழையின் போது அதிக அளவு மழை நீர் தேங்கிய திரு.வி.க. நகர் மண்டலம் மற்றும் கோடம்பாக்கம் மண்டலங்களில் பணிகளை துரிதப்படுத்தும் விதமாக கூடுதல் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மழைநீர் வடிகால்களில் தூர்வாரும் பணிகளைக் கண்காணிக்க பொறுப்பு அலுவலர்களாக சென்னை மாநகராட்சியின் தலைமைப் பொறியாளர்கள் மற்றும் மேற்பார்வை பொறியாளர்களை நியமித்து சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார்.
இதன்படி திருவெற்றியூருக்கு தேவேந்திரன், மணலிக்கு காளிமுத்து, மாதவரத்திற்கு பாலசுப்பிரமணியன், தண்டையார் பேட்டைக்கு பாபு, ராயபுரத்திற்கு வீரப்பன், திரு.வி.க. நகருக்கு நேரு குமார், அம்பத்தூருக்கு விஜயகுமார், அண்ணா நகருக்கு துரை சாமி, தேனாம்பேடைக்கு சக்தி மணி கண்டன், கோடம்பாக்கத்திற்கு பால முரளி, வளசரவாக்கத்திற்கு விஜயலட்சுமி, ஆலந்தூருக்கு மகேசன், அடையாறுக்கு ராஜேந்திரன், பெருங்குடிக்கு சரவணபவநந்தம், சோழிங்நல்லூருக்கு பால சுப்பிரமணியன் ஆகியோர் பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.