வட இந்தியாவில் பருவ மழை தீவிரம் அடைந்திருக்கிறது. இதனால் மக்கள் எதையாவது சூடாக சமைத்து சாப்பிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதைத் தொடர்ந்து, உத்தரப்பிரதேச மாநிலம் மீரட்டில் இருக்கும் கெளஷல் ஸ்வீட்ஸ் என்ற கடை உரிமையாளர் சாப்பாட்டுப் பிரியர்களுக்காக புதிய ஒரு போட்டியை அறிவித்திருக்கிறார்.
அவரது கடையில் 8 கிலோ எடையுள்ள பாகுபலி சமோசா தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த 8 கிலோ சமோசாவை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ரூ.50,000 பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார்.
இது குறித்து கடை உரிமையாளர் சுபம் கூறுகையில், “சமோசா தயாரிப்பில் எதையாவது புதுமையை செய்யவேண்டும் என்று நினைத்தேன். ஆரம்பத்தில் 4 கிலோ சமோசா தயார் செய்தேன். அதன் பிறகுதான் 8 கிலோ சமோசா தயாரித்தேன். இந்த 8 கிலோ சமோசா தயாரிக்க ரூ.1100 செலவாகிறது.
இந்த சமோசாவை 30 நிமிடத்தில் சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு 50,000 ரூபாய் பரிசு என்று அறிவித்திருக்கிறோம். 8 கிலோ எடை கொண்ட சமோசாவை இதுவரை யாரும் சாப்பிட்டு வெற்றி பெறவில்லை. ஆனால் இந்தப் போட்டியை அறிவித்த பிறகு கடைக்கு வரும் வரும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது. வரும் நாள்களில் 10 கிலோ எடைகொண்ட சமோசாவையும் தயாரிக்கத் திட்டமிட்டு இருக்கிறேன்” என்று தெரிவித்தார்.
8 கிலோ சமோசா தயாரிப்பதை ஏராளமானோர் நேரில் வந்து பார்த்து செல்கின்றனர். சமோசாவை சாப்பிட முடியாதவர்கள் அதற்கான கட்டணத்தைக் கொடுத்துவிட்டு செல்லவேண்டும். இந்த சமோசா பற்றிச் செய்தி வெளியில் வந்தவுடன் யூடியூபர்கள் மற்றும் சோசியல் மீடியா பிரபலங்கள் தினம் தினம் வந்து வீடியோ எடுத்துச்சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
இதற்கு முன்பு புனேயில் ஒரு ஹோட்டல் உரிமையாளர் ஒரு பிளேட் அசைவ சாப்பாட்டை சாப்பிட்டு முடிப்பவர்களுக்கு ராயல் என்பீல்டு புல்லட் பரிசாக வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதற்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.