சென்னை மாநகராட்சி மணலி மண்டலத்தில், தனியார் நிறுவனத்துடன் இணைந்து குப்பையை தரம் பிரிக்கும் போட்டி துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில், சென்னை மேயர் பிரியா கலந்துகொண்டு ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்ற தலைப்பில் குப்பையை தரம் பிரிக்கும் சவால் என்ற போட்டியின் அறிவிப்பு பலகையை திறந்து வைத்தார்.
பின்னர், தனது வீட்டில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்த தனது புகைப்படங்களை இந்த போட்டியின் இணையதள செயலியில் பதிவிட்டு உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
ஜூலை 9 முதல் ஆகஸ்ட் மாதம் 8-ம் தேதி வரை ஒரு மாதம் நடைபெறும். இந்த குப்பை தரம் பிரித்து தரும் போட்டியில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கலந்து கொண்டு, தங்கள் வீட்டிலேயே குப்பைகளை மக்கும் குப்பை, மக்காத குப்பை என இரண்டு கூடைகளில் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
அதை படம் எடுத்து பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் வெளியிட்டு 8925800864 என்ற எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுக்க வேண்டும்.
அதே எண்ணின் வாட்ஸ் அப்பில் இல்லத்தரசிகள் பதிவிட்டால், அவர்களை குலுக்கல் முறையில் தேர்வு செய்து முதல் 3 பேருக்கு டிவி, வாஷிங் மெஷின், பிரிட்ஜ் உள்ளிட்ட பரிசு பொருட்கள் வழங்கப்படும்.
எனவே, பொதுமக்கள் ‘என் குப்பை எனது பொறுப்பு’ என்ற இந்த திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தருமாறு மேயர் பிரியா கேட்டுக் கொண்டார்.