திருவனந்தபுரம்: கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டம் கும்பழா பகுதியைச் சேர்ந்தவர் அபிஜித் சோமன் (26). சட்டக் கல்லூரியில் படித்து வரும் இவர், ஆரன்முளா சட்டமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவராக இருந்து வருகிறார். இவர் படிக்கும் அதே சட்டக் கல்லூரியில் ஆரன்முளா பகுதியை சேர்ந்த ஒரு மாணவியும் படித்து வருகிறார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இருவரும் காதலிக்கத் தொடங்கினர்.இதற்கிடையே அபிஜித் சோமன் மாணவியை லாட்ஜுக்கு அழைத்துச் சென்று பலமுறை பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரிடமிருந்து ₹1 லட்சம் பணமும் வாங்கியுள்ளார். கல்லூரியில் கட்டுவதற்காக வைத்திருந்த பணத்தை அந்த மாணவி கொடுத்துள்ளார். இந்நிலையில் கல்லூரியில் பணம் கட்டுவதற்கான கடைசி தேதி நெருங்கியதால் பணத்தை திருப்பித் தருமாறு அந்த மாணவி அபிஜித்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர் பணத்தை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் அவர் மாணவியுடனான தொடர்பை துண்டித்தார். இதனால் மனமுடைந்த அந்த மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுகுறித்து ஆரன்முளா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது தான் நடந்த சம்பவம் குறித்து தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து அபிஜித் சோமனை கைது செய்த போலீசார் பத்தனம்திட்டா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர்.