மதுரை: பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான 15 வயது சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை உடனடியாக கலைக்க மருத்துவக் குழுவுக்கு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த 15 வயது சிறுமி, வார இறுதி நாட்களில் அங்குள்ள தீப்பெட்டி தொழிற்சாலைக்கு வேலைக்கு சென்று வந்தார். அப்போது அதே தொழிற்சாலையில் பணிபுரிந்த தொழிலாளி ஒருவர், சிறுமியை திருமணம் செய்வதாக கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இது தொடர்பாக கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீஸார் வழக்கு பதிந்து தொழிலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதற்கிடையில், அந்தச் சிறுமி கர்ப்பமானார். இதனைத் தொடர்ந்து சிறுமியின் வயிற்றில் வளரும் 24 வார கருவை கலைக்க அனுமதி கோரி அவரது பெற்றோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவினை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரித்தார். அப்போது, கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலரிடம் வாட்ஸ் அப் வீடியோ கால் மூலமாக நீதிபதி பேசினார். அதில், சிறுமியின் வயது, கருவின் காலம் அடிப்படையில் கருவை கலைக்கலாம் என மருத்துவ அலுவலர் தெரிவித்தார். தொடர்ந்து சிறுமியிடமும் நீதிபதி பேசினார். அப்போது அந்தச் சிறுமி கருவை கலைக்க சம்மதம் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தில் 24 வாரம் வரையிலான கருவை கலைக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது. எனவே, சிறுமியின் வயிற்றில் வளரும் கருவை உடனடியாக கலைக்க வேண்டும். சிறுமிக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.