விலகிய போரிஸ் ஜான்சன்: பிரிட்டன் பிரதமர் ரேஸில் யார் யார்… அடுத்து என்ன நடக்கும்?!

கடந்த ஜூலை 7-ம் தேதி, பிரிட்டனின் கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் ராஜினாமா செய்தார் என்ற செய்தி வெளியானது. இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களிடம் உரையாற்றிய போரிஸ் ஜான்சன், தான் பிரதமர் பதவியில் இருந்து விலகப் போவதை உறுதிசெய்தார். மேலும், “இந்த அரசாங்கத்தின் சாதனைகளுக்காகப் பெருமிதம் கொள்கிறேன்” என்றும் அப்போது தெரிவித்தார்.

போரிஸ் ஜான்சன்

போரிஸ் ஜான்சன் ராஜினாமாவின் பின்னணி என்ன ?

ஜூன் 6 -ம் தேதி நள்ளிரவு போரிஸ் ஜான்சன் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு , வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் 59 சதவிகித வாக்குகளைப் பெற்று போரிஸ் ஜான்சன் தன் பதவியை தக்க வைத்துக்கொண்டார். இந்த வெற்றியின் மூலம் போரிஸ் ஜான்சனின் பதவி தக்க வைக்கப்பட்டாலும், அவருடைய தலைமைக்கு எதிராக கட்சிக்குள் எழுந்த எதிர்ப்பு, அவருடைய அதிகாரத்தை வலுவிழக்கச் செய்தன.

அதனைத் தொடர்ந்து ஒரே மாதத்தில், நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் பதவி விலகினர்.

தொடர்ந்து ஐம்பதுக்கும் மேற்பட்டடோர் எம்.பி.க்கள் அரசு அல்லது கட்சி பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்த தருணம் இது. இவை தவிர, “இந்த ஆண்டு தொடக்கத்தில் சில குற்றச்சாட்டுகள் எம்.பி கிறிஸுக்குக்கு எதிராக நிலுவையில் இருந்தபோதும், அது பற்றி அறிந்திருந்தும் அவரை ‘துணை தலைமைக் கொறடா’ பதவிக்கு நியமனம் செய்தது எனது மிகப்பெரிய தவறு” என்று போரிஸ் ஜான்சன் ஒப்புக் கொண்டார். இதனால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் மன்னிப்பு கோரினார் போரிஸ்.

கிறிஸ் பிஞ்சர் விவகாரம் என்ன ?

முன்னாள் துணைத் தலைமை கொறடாவும் நாடாளுமன்ற உறுப்பினருமான கிறிஸ் பிஞ்சர் தனியார் கிளப் ஒன்றுக்குச் சென்றுள்ளார். அளவுக்கு அதிகமாக குடித்திருந்ததால், இரண்டு ஆண்களிடம் தவறாக நடந்து கொண்டதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. அதன்பின் பல வருடங்களுக்கு முந்தைய குற்றச்சாட்டுகளும் அடுக்கடுக்காக வெளியே வந்தன. இத்தகைய குற்றச்சாட்டுகளைக் கணக்கில் எடுக்காமல், பிப்ரவரி மாதம் கிறிஸ் பிஞ்சரை துணை தலைமை கொறடாவாக போரிஸ் நியமித்தார். இதனால் அடுத்தடுத்து நடந்த நிகழ்வுகள் பிரதமரின் வீழ்ச்சிக்கு வித்திட்டது.

போரிஸ் ஜான்சன்

இந்தப் பதவி விலகலுக்கு வழிவகுத்த மற்றொரு குற்றச்சாட்டு பொதுமுடக்க விதிமீறல்கள். 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது பிறந்தநாள் நிகழ்வில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக இந்த ஆண்டு ஏப்ரல் மாதம், போரிஸ் ஜான்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அதேபோல கொரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுவதற்காக முதல் முறையாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டபோது பார்ட்டி ஒன்றுக்குச் சென்றது குறித்து பின்னர் மன்னிப்பு கோரினார் போரிஸ் ஜான்சன்.

மேலும், பிரதமர் அலுவலகம் மற்றும் ஒயிட் ஹாலில் பொதுமுடக்க விதிகளை மீறியதாக 83 பேருக்கு 126 விதமான அபராதங்களை காவல்துறையினர் விதித்தனர். உலகமே முடங்கி கிடந்த தருணத்தில், சமூக இடைவெளியைக் கடைபிடித்து முன்னுதாரணமாக விளங்க வேண்டிய அரசியல் ஆளுமையே விதியை மீறியது சர்சையைக் கிளப்பியது.

அடுத்த பிரிட்டன் பிரதமர் யார்?

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன், பதவி விலகுவதாக அறிவித்ததைத் தொடர்ந்து, அடுத்த பிரதமர் மற்றும் கன்சர்வேட்டிவ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ரிஷி சுனக்

கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவராக இவர் ஆவதற்கான எல்லா சாத்தியங்களும் உண்டு என்று முன்பே சொல்லப்பட்டது. நார்த் யோர்க்-ஷைர் தொகுதியிலிருந்து 2015-ம் ஆண்டுதான் இவர், நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வானார். கொரோனா தொற்று பொதுமுடக்க காலத்தில் ஆற்றிய பணிகளால் இவர் பிரபலமானார். இவர் இந்திய வம்சாவளியைச் சார்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 42 வயதான ரிஷியின் பாட்டி , தாத்தா பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இவரது மனைவி இன்போசிஸ் நிறுவனரான நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா. மக்களிடையே நல்ல செல்வாக்கைப் பெற்றிருப்பதாலும் கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்கட்சியிடையே இவருக்கு அதிகரித்திருக்கும் செல்வாக்காலும் , ரிஷி அடுத்த பிரதமராக அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனால் கொரோனா விதியை மீறியதற்காக அபராதம் செலுத்தியவர்களுள் இவரும் ஒருவர்.

இந்திய வம்சாவளி ரிஷி சுனக் எம்.பி – இங்கிலாந்து

சஜித் ஜாவித்

ப்ராம்ஸ்க்ரோவ் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர். 2019-ம் ஆண்டு தலைமைப் பொறுப்புக்காக முன்னிறுத்தப்பட்ட இவர், அப்போது நான்காம் இடத்தை பெற்றிருந்தார். நாட்டில் அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் தேசிய கடன்கள் குறித்தும் இவர் தொடர்ந்து எச்சரித்து வந்தார். பாகிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்து வந்த முதல் தலைமுறை குடும்பத்தில் பிறந்த சஜித் ஜாவித்தின் தந்தை பேருந்து நடத்துநராக இருந்தவர். இப்படியான எளிய பின்னணியில் இருந்து வந்த இவர், 2010-ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராகும் முன்பு ஒரு வெற்றிகரமான தொழில் வாழ்வைக் கொண்டவராகவும் இருந்தார்.

ஜெர்மி ஹண்ட்

2019-ம் ஆண்டு நடந்த தலைவர் தேர்தலின்போது, போரிஸ் ஜான்சனுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர். முன்னாள் வெளியுறவு செயலாராகவும் இருந்த இவருக்கு வெஸ்ட்மின்ஸ்டரில் இருந்த செல்வாக்கு அப்படியே நீடிக்கிறது.

மைக்கேல் கோவ்

மைக்கேல் கோவ்

2019-ம் ஆண்டு நடந்த தலைவர் போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தவர் இவர். ஆனால், ஐரோப்பிய யூனியன் வாக்கெடுப்பை முன்னிட்டு 2016-ம் ஆண்டு நடத்தப்பட்ட தலைமைக்கான தேர்தலின்போது அதிமுக்கியத்துவம் வாய்ந்தவராக இவர் பார்க்கப்பட்டார். பிபிசியின் முன்னாள் செய்தியாளர் மற்றும் டைம்ஸ் நாளிதழின் கட்டுரையாளரான இவர், அமைச்சரவையின் நீண்ட-கால உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த தலைவர் எப்படி தேர்வு செய்யப்படுவர் ?

8 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பவர் தலைவர் தேர்தலுக்கு போட்டியிடலாம். போட்டியிடப்போவது யார் யார் என்று உறுதியான பிறகு, இரண்டுக்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் இருந்தால், இரண்டு பேராகும் வரை பல சுற்றுகள் தொடர் வாக்கெடுப்பு நடத்தி முடிவு செய்யலாம். முதல் சுற்றில் போட்டியாளர்கள் 5% வாக்குகளைப் பெற வேண்டும். அப்படி பெற முடியாதவர்கள் வெளியேற வேண்டும்.
இரண்டாம் சுற்றில் 36 பேரின் வாக்குகளைப் பெற வேண்டும். இப்படியாக தொடர்ந்து வரும் சுற்றில் கடைசியாக இரண்டு போட்டியாளர்கள் மட்டும் மீதமிருக்கும் நிலையில், நாட்டிலுள்ள அனைத்து கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களும் வாக்களித்து தலைவரைத் தேர்வு செய்வர். கட்சியின் தேர்தலில் வெல்லும் போட்டியாளர் கன்சர்வேடிவ் கட்சியின் தலைவராக ஆவார். அவரிடம் பிரிட்டிஷ் அரசி ஆட்சியமைக்க அழைப்பு விடுப்பார் என்பது குறிப்பிடதக்கது!

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.