இந்திய தவ்ஹீத் ஜமாஅத் துணைப்பொதுச்செயலாளர் முஹம்மது ஷிப்லி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், “தியாகத் திருநாள் என்கிற பெருநாளை முஸ்லிம் சமுதாயம் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் இந்நன்னாளில் இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்வுறுகிறேன். இப்ராஹீம் நபியின் வாழ்க்கையை மனித குலத்திற்கு படிப்பினையாக ஆக்கி,அவரது பாதையை முன்மாதிரியாக காட்டித் தருகிறான் இறைவன்.
படைப்புகள் கடவுள் அல்ல;படைத்தவனே கடவுள் என்ற கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்ததால் ஏகத்துவ இமாம் இப்ராஹீம் நபி என அவரை முஸ்லிம்கள் போற்றுகிறார் கள்.ஆயுதத்தை அவர் கையில் ஏந்தவில்லை;அறிவாயுதத்தை ஏந்தினார்.மூட நம்பிக்கைகளை அறிவுப்பூர்வமான வாதங்கள் மூலம் தகர்த்தெறிந்தார்.
சாதி,மதம்,இனம்,மொழி,பணக்காரன்,ஏழை என எந்த ஏற்றத் தாழ்வுகளும் இல்லாமல் உலகளாவிய சகோதரத்துவத்தை,ஒற்றுமையை வலியுறுத்தும் சர்வதேச மாநாடான ஹஜ் கடமை நபி இப்ராஹீம் குடும்பத்தை மையப்படுத்தியே இன்று முஸ்லிம்கள் நிறைவேற்றி வருகிறார்கள்.அதனால்தான் இப்ராஹீம் நபியை தனி மனிதர் என்று கூறாமல் அவர் ஒரு சமுதாயம் என இறைவன் அடையாளப்படுத்துகிறான்.
உலகம் இன்று அமைதியை தேடி அலைந்து கொண்டிருக்கிறது.சாதி மத ஏற்றத்தாழ்வுகள்,உயிர்பலிகள்,பெண்கள் குழந்தைகள் மீதான வன்முறை;பொருளாதார சுரண்டல்,மத மோதல்கள்,சுயநல அரசியல்,மனித உரிமை மீறல்கள் என மனித விரோத செயல்கள் மலிந்து போனதால் பூமிப்பந்தில் அமைதி தொலைந்து கொண்டிருக்கிறது.
இந்த அமைதி தொலைந்து போக காரணமான மனித குல விரோதிகளை அடையாளம் கண்டு வேரறுப்போம்;வகுப்புவாத சக்திகளை இனம் கண்டு தனிமைப்படுத்துவோம்;பயங்கரவாதம் எந்த வடிவில் வந்தாலும் அதனை வீழ்த்த தியாகம் செய்வோம்.மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அறப்போர் புரிவோம்;இந்தியா ஜனநாயக தன்மையை இழந்துவிடாமல் காக்கும் பணியில் நம்மை அற்பணிப்போம் இதற்காக எந்த தியாகத்தையும் செய்ய,அமைதியும்,நல்லி ணக்கமும்,ஒற்றுமை உணர்வும் தழைக்க இந்த தியாக திருநாளில் உறுதி ஏற்போம்” என்று முஹம்மது ஷிப்லி தெரிவித்துள்ளார்.
இதேபோல், இந்திய தேசிய லீக் மாநில பொதுச்செயலாளர் ஜகிருத்தீன் அஹமது வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உலகெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும், நிம்மதியும் நிரந்தரமாக மனித இனத்திற்கு கிடைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையை, உலக மக்கள் ஒன்றுபட்டு பிரார்த்திப்போம். ஹஜ் கடமையை நிறைவேற்றி தியாகத்தின் மகிமையை உணர்த்தும்வண்ணம், தூய்மையான உள்ளத்துடன் தியாகத்திருநாளை கடைபிடிக்கும் இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும் இந்திய தேசிய லீக் சார்பில் இனிய பக்ரீத் நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.
தியாகத் திருநாள் எனும் பக்ரீத் பெருநாள் இஸ்லாமிய சமுதாய மக்களால் இன்று நாடெங்கும் மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடப்படுகிறது. ஈத்-உல்-அஸா என்னும் நோன்பைக் குறிக்கும் இந்தப் பக்ரீத் பெருநாள், `கடமையைச் செய்வதாலேயே உண்மையான இன்பம் பிறக்கிறது’ என்பதை உணர்த்தும் நன்னாளாகும்.
‘தினசரி வாழ்வில் கடைப் பிடிக்கக்கூடிய எளிய, உயர்ந்த வழிமுறைகள் பலவற்றைக் கற்பித்த நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளைப் பின்பற்றி வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் தங்களது வாழ்வியல் பாதையை வகுத்து கொள்ள வேண்டும். மற்ற சமுதாயத்தினர் நம்மை பின்பற்றி, தங்களது வாழ்வியல் பாதை அமைத்து கொள்ளும் அளவிற்கு நபிகள் வழியில் நான் இனி வரும் நாட்களிலாவது பயணிக்க வேண்டும்.
தற்போது நாட்டில் சம உரிமை, சம வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் அனைவரும் சமமாக பெறுவதே மக்களாட்சியின் தத்துவமாகும். அந்த முயற்சிகள் வெற்றி பெற மதச்சார்பற்ற சக்திகள் ஓரணியில் திரள வேண்டும்.
சில மதவாத சக்திகளலால் நாட்டில் வெறுப்பு அரசியல் மூலம் இஸ்லாமிய – இந்து சகோதரர்களிடையே மோதலை உருவாக்கி அதன் மூலம் குளிர் காய நினைக்கிறக்கிறார்கள். அவர்களின் எண்ணத்தை முறியடித்து, நாட்டில் அமைதியும், வளமும் பெருக பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம் என இந்திய தேசிய லீக் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஜகிருத்தீன் அஹமது தெரிவித்துள்ளார்.