கொரோனாவால் சுற்றுலாத்துறை வீழ்ச்சி, நிர்வாக சீர்கேடு, அதிக கடன் உள்ளிட்டவை இலங்கை தற்போது எதிர்கொள்ளும் பிரச்சனைகளுக்கு முக்கிய காரணங்களாக கருதப்படுகிறது.
கடந்த 2019ஆம் ஆண்டில் ஈஸ்டர் தினத்தன்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல்களில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகினார். இந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து அந்நாட்டில் சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைத் தொடங்கியது.
இதனை தொடர்ந்து, கொரோனா பரவல் காரணமாக அந்நாட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் நோய்த் தடுப்பு கட்டுப்பாடுகளால், பொருளாதார நிலை மேலும் மோசமானதாக சொல்லப்படுகிறது. டீ, ஏலக்காய், ரப்பர் போன்ற பொருட்களின் உற்பத்தியை இலங்கை அதிகளவில் நம்பியிருந்த நிலையில், ஏற்றுமதி சரிந்ததால் அந்நாட்டின் வருவாய் பெரிதும் குறைந்தது. அதன் பிறகு இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்ட நிலையில், அந்நாட்டின் நாணயமும் பெரிய அளவில் மதிப்பிழந்தது.
இதனை சமாளிக்க உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீன வங்கிகளிடம் இலங்கை அதிகளவில் கடனை பெற்றது. பெரும்பாலும் வருவாய் வராத திட்டங்களுக்கு இலங்கை அரசு தொடர்ந்து வாங்கிய கடனால், வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதனை அடுத்து, கடனுக்கான வட்டியை செலுத்த மீண்டும் கடன் பெறும் நிலையை அந்நாடு எதிர்கொள்ள நேர்ந்தது.
முன்னதாக, 2019ஆம் ஆண்டில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றிப்பெற்ற நிலையில், அவரது சகோதரர் மகிந்தாவை பிரதமராக அவர் நியமித்தார். நாட்டின் நிதிப் பற்றாக்குறைகளைப் பொருட்படுத்தாமல் பல்வேறு வரிவிதிப்புகளில் மாற்றங்களை கோத்தபய அறிவித்த நிலையில், பல்வேறு வரிச் சலுகைகளை அறிவித்ததால்தான், நாட்டில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
2021ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ரசாயன உரங்கள், யூரியா இறக்குமதிக்கு இலங்கை தடை விதித்தது. மேலும், விவசாயிகள் அனைவரும் இயற்கை உரங்களைப் பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இதன் காரணமாக மக்காச்சோளா, தேயிலை, நெல் உள்ளிட்ட பயிர்களின் விளைச்சல் பெருமளவு குறைந்து, உணவுத் தேவைக்காக பிறநாடுகளை சார்ந்திருக்கும் சூழல் ஏற்பட்டது.