திருமலை: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் சந்தர்ப்பவாதி என்று முன்னாள் முதல்வர் சந்திரபாபு குற்றம்சாட்டி உள்ளார். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் நகரியில் தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, நேற்று பொதுமக்கள் மத்தியில் பேசியதாவது: முதல்வர் ஜெகன்மோகன் சந்தர்ப்பவாதி, அவருக்கு தேவை இருக்கும்வரை யாராக இருந்தாலும் பயன்படுத்திக்கொண்டு தூக்கி வீசுவது வழக்கம். அவ்வாறு தனது சொந்த சித்தப்பாவான ஒய்எஸ். விவேகானந்தரெட்டியை பயன்படுத்திக்கொண்டார். தனது சகோதரியை தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்திக்கொண்டு ஆட்சிக்கு வந்தவுடன் அவரை தள்ளி வைத்தார். இன்று தனது தாயை கூட ராஜினாமா செய்யும் நிலைக்கு கொண்டு வந்துள்ளார். ஆனால் ஜெகன்மோகன் மட்டும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் நிரந்தர தலைவர் என கூறிக்கொள்கிறார். மாநிலத்தில் எந்தவித வளர்ச்சி பணிகளும் இல்லாமல், ஒரு தொழிற்சாலை கூட கொண்டுவர முடியாமல், எங்கு பார்த்தாலும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. ரவுடிகள் கையில் அனைத்தையும் கொடுத்து ஆட்டி படைத்து வருகிறார். சாதாரண தள்ளுவண்டி கடைக்கு கூட கமிஷன் கொடுத்தால் மட்டுமே வேலை நடக்கும் என்ற நிலைக்கு கொண்டுவந்துள்ளார். வரும் சட்டமன்ற தேர்தலில் ஜெகன்மோகனுக்கு உரிய பாடம் புகட்ட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.