இயக்குநர் லீனா மணிமேகலையின் நிகழ்த்துக்கலை ஆவணப்படமான `காளி’ படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. அந்த போஸ்டரில், காளி தெய்வம் சிகரெட் பிடிப்பது போன்றும், ஒருகையில் LGBTQ+ சமூகத்தினரின் கொடியைப் பிடித்தும் இருந்தது. இதற்கு, பா.ஜ.க மற்றும் இந்துத்துவா அமைப்புகளிடமிருந்து தொடர்ந்து கண்டனங்களும் எதிர்ப்புகளும் எழுந்த வண்ணமே உள்ளது. மேலும் இந்த விவகாரத்தில், மத உணர்வுகளைப் புண்படுத்தியதாக லீனா மணிமேகலை மீது சில இடங்களில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
எதிர்ப்புகள் ஒருபுறமிருந்தாலும், இதற்கு ஆதரவாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, “என்னைப் பொறுத்தவரை காளி தெய்வம் இறைச்சி உண்ணும், மதுவை ஏற்றுக்கொள்ளும்” என்று கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு பாஜக எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமல்லாமல், மொய்த்ராவின் சொந்த கட்சியான திரிணாமுல் காங்கிரஸ் கூட, இந்த கருத்துக்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லையெனக் கூறியிருந்தது. அதைத்தொடர்ந்து மொய்த்ராவை கைதுசெய்ய வேண்டும் எனக் கூறினர் பாஜகவினர். அதற்கு மொய்த்ராவும், வழக்கு பதியுங்கள் நீதிமன்றத்தில் சந்திப்போம் என சவால் விட்டிருந்தார். இந்த நிலையில், படைப்புச் சுதந்திரம் ஒருவருடைய மத உணர்வுகளை புண்படுத்தக்கூடாது என ஆர்.எஸ்.எஸ் கூறியுள்ளது.
ராஜஸ்தானில் நடைபெற்று வரும் மூன்று நாள் அகில பாரதிய பிரன்ட் பிரசாரத்தில் பேசிய ஆர்எஸ்எஸ்-ன் அகில பாரதிய பிரச்சார் பிரமுக் சுனில் அம்பேகர்(Sunil Ambekar), “படைப்புச் சுதந்திரம் என்பது இந்தியாவின் பாரம்பர்யம். ஆனால், ஒருவரின் மத உணர்வுகளை யாரும் புண்படுத்தக் கூடாது. ஒவ்வொருவரும் இதில் கவனமாக இருக்க வேண்டும்” என்று கூறினார்.
மேலும் தொடர்ந்து உதய்பூர் சம்பவம் குறித்து பேசிய சுனில் அம்பேகர், “உதய்பூர் படுகொலைக்கான கண்டனம் என்பது குறைவாகவே உள்ளது. இச்சம்பவத்துக்கு எதிராக இஸ்லாமியச் சமூகமும் முன்வந்து குரல்கொடுக்கவேண்டும். சில நாள்களாகவே மக்களுக்குத் தொடர்ந்து அச்சுறுத்தல்கள் விடப்பட்டுவருகிறது. ஒருவருடன் நீங்கள் உடன்படவில்லையென்றால், அதற்கு அமைதியான முறையில் போராட்டம் நடத்த வழிகள் உள்ளன. அதுமட்டுமல்லாமல் ஒருவரைக் கொல்ல யாருக்கும் இங்கு உரிமை இல்லை” எனத் தெரிவித்தார்.