சிங்கப்பூர்:சிங்கப்பூர் பிரதமருக்கு கொலை மிரட்டல் விடுத்தவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.தென்கிழக்காசிய நாடான ஜப்பானின், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்தின் போது சுட்டுக் கொல்லப்பட்டார்.
கருத்து
இந்த செய்தி, சிங்கப்பூரின் ‘சேனல் நியூஸ் ஏஷியா’ என்ற வலைதள பத்திரிகையின் முகநுால் பக்கத்தில் வெளியாகியிருந்தது.இந்த செய்திக்கு, சிங்கப்பூரைச் சேர்ந்த ஒருவர், ‘ஷின்சோ அபேவுக்கு நேர்ந்த கதி, சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுங்கிற்கும் ஏற்படும்’ என கருத்து தெரிவித்திருந்தார்.
இது பற்றி தெரியவந்ததும், முகநுாலில் கருத்து தெரிவித்த நபரை கண்டுபிடித்து போலீசார் கைது செய்தனர். அவர் வீட்டில் ஒரு ‘லேப்டாப், டேப்லட்’ நான்கு மொபைல் போன்கள் கைப்பற்றப்பட்டன. வன்முறையை துாண்டும் வகையில் சமூக வலைதளத்தில் செய்தி வெளியிட்டதாக அந்த நபர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் மின்னணு ஊடகங்களில் வன்முறையை துாண்டும் வகையில் கருத்து வெளியிட்டால், ஐந்து ஆண்டுகள் வரை சிறை மற்றும் அபராதம் விதிக்கப்படும்.
கண்டனம்
இதற்கிடையே சிங்கப்பூர் பிரதமர் லீ சீன் லுங், ‘காட்டுமிராண்டித்தனமான வன்முறைக்கு, நெருங்கிய நண்பர் ஷின்சோ அபே பலியாகி விட்டார்’ என கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஜப்பான் சென்றபோது, ஷின்சோ அபேவை சந்தித்து உணவருந்தியது குறித்தும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement