போடி: தொடர் மழையால் இடுக்கி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேனியில் இருந்து மூணாறு செல்லும் வாகனங்களை மாற்றுப்பாதையில் இயக்க இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷிபா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
கேரளாவில் தென்மேற்குப் பருவமழை முன்னதாக மே 29-ல் தொடங்கியது. இருப்பினும், ஜூன் 7 முதல் மழை சீராக பெய்த நிலையில், கடந்த 2 வாரங்களாக தீவிரம் அடைந்துள்ளது.
இதனால் இடுக்கி மாவட்டத்தில் மண், வீடு மற்றும் மரங்கள் சரிந்து இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். ஈரத்தன்மை அதிகரித்து மண் சரிவு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதால் மகாத்மா காந்தி தேசிய ஊரக திட்டப் பணிகள் நிறுத்தப்பட்டன.
தொடர் மழையால் நேற்று முன்தினம் மூணாறு தாவரவியல் பூங்கா அருகே மண் சரிவு ஏற்பட்டது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இதேபோல், மூணாறு காவல் நிலையம் அருகே மீண்டும் மண் சரிவு ஏற்பட்டு போக்குவரத்து பாதித்தது.
மழை தொடர்ந்து பெய்வதால் இடுக்கி மாவட்ட மலையோரப் பகுதிகளில் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலா தலங்களில் படகு சவாரி, மலைப்பகுதிகளில் சாகசப் பயண அனுமதி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
தேனியில் இருந்து மூணாறு செல்லும் வாகனங்கள் கொச்சின் தேசிய நெடுஞ்சாலையான போடி, போடிமெட்டு, பூப்பாறை, பெரிய கானல், தேவிகுளம் வழியே மூணாறு செல்வது வழக்கம்.
மலைச்சரிவு அதிகம் உள்ள இந்த வழித்தடத்தில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து பாதுகாப்பு கருதி இப்பகுதியில் போக்குவரத்துக்கு தடை விதித்து இடுக்கி மாவட்ட ஆட்சியர் ஷிபா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்.
இதையடுத்து, போடிமெட்டில் இருந்து மாற்றுப் பாதையான பூப்பாறை, ராஜாக்காடு, குஞ்சி தண்ணி, ராஜகுமாரி, பள்ளிவாசல் வழியாக வாகனங்கள் மூணாறு சென்று வருகின்றன.