அவுரங்காபாத்: ‘இந்திய நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கடந்த ஓராண்டில் 4 கோடியில் இருந்து 5 கோடியாக அதிகரித்துள்ளது.மகாராஷ்டிரா மாநிலம், அவுரங்காபாத்தில் உள்ள, மகாராஷ்டிரா தேசிய சட்ட பல்கலைக் கழகத்தின் முதல் பட்டமளிப்பு விழா நேற்று நடந்தது. இதில், ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜுஜு கலந்து கொண்டு பேசியதாவது:கடந்த ஜூலையில் நான் சட்ட அமைச்சராக பதவியேற்ற போது, இந்திய நீதிமன்றங்களில் 4 கோடி வழக்குகள் நிலுவையில் இருந்தன. ஆனால், கடந்த ஓராண்டில் இந்த எண்ணிக்கை 5 கோடியாக உயர்ந்துள்ளது. இதை தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், வழக்குகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்திய நீதித்துறையின் மீது வெளிநாடுகளில் மிகுந்த மரியாதை இருக்கிறது. ;நமது நாட்டு நீதிமன்றங்கள் அளிக்கும் தீர்ப்புகள், இங்கிலாந்து நீதிமன்றங்களில் உதாரணமாக காட்டப்படுகின்றன. இந்நாட்டு நீதிமன்றங்களில் ஒரு நீதிபதி தினமும் 3-4 தீர்ப்புகளை வழங்குகிறார். ஆனால், இந்திய நீதிமன்றங்களில் நீதிபதிகள் தினமும் 40 முதல் 50 வழக்குகளை விசாரிக்கின்றனர். கூடுதல் நேரம் பணியாற்றி, வழக்குகளை அவர்கள் விசாரிக்கிறார்கள். அவர்களும் மனிதர்கள்தான் என்பதை உணர்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.