ரூ.50 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட தமிழக தொழிலதிபர் மீட்பு – 5 பேரை கைது செய்து ஹரியாணா போலீஸார் விசாரணை

புதுடெல்லி: டெல்லி விமான நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட தமிழக தொழிலதிபரும், அவரது கணக்காளரையும் ஹரியாணா போலீஸார் மீட்டுள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் சென்னம நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கே.எஸ்.வில்வபதி (56). இவரது ஸ்ரீஜெய்கிருஷ்ணா டெக்ஸ்டைல்ஸ் ஸ்பின்னிங் மில்லில் தயாராகும் நூல்களை வெளிநாடுகளுக்கும், வட மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கிறார். கடந்த ஜூன் 5-ல் டெல்லி வாழ் தமிழர் சிவக்குமார், வில்வபதிக்கு போன் செய்து வங்கதேசத்துக்கு அனுப்ப 50 டன் நூல் தேவை. இதற்காக ரூ.1.25 கோடிக்கு ஒப்பந்தம் செய்ய டெல்லி வருமாறு வில்வபதியை அழைத்துள்ளார். வில்வபதியும் தனது கணக்காளர் வினோத் குமாருடன் (28) டெல்லிக்கு விமானத்தில் புறப்பட்டுள்ளார்.

நேற்றுமுன் தினம் மாலை 6 மணிக்கு டெல்லி விமான நிலையம் சென்றவர்களை சிவகுமார் உள்ளிட்ட சிலர் கடத்தி சென்றுள்ளனர். வில்வபதியையும், வினோத்குமாரையும் ஹரியாணாவின் குருகிராமில் உள்ள ஒரு வீட்டில் கட்டி வைத்துள்ளனர். பின்னர் வில்வபதியை மிரட்டி ரூ.50 லட்சம் கேட்டுள்ளனர்.

அதன்பின், வில்வபதி தனது மில்லின் மேலாளர் சண்முகவேலை தொடர்பு கொண்டு ரூ.50 லட்சம் தொகையை அனுப்பி வைக்கும்படி கூறியுள்ளார். சந்தேகம் அடைந்த சண்முகம் திண்டுக்கல் தாடிக்கொம்பு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

மேலும் ஹரியாணா எஸ்டிஎப் ஐஜி சதீஷ் பாலனிடன் உதவி கேட்கப்பட்டது. தமிழரான சதீஷ் பாலனின் வழிகாட்டுதலில் ஒரு தனிப்படை அமைத்து கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டது. இதற்கிடையே குருகிராமின் தமிழரும் வில்வபதியின் குடும்ப நண்பருமான பெருமாள் என்பவருடன் கடத்தல் கும்பல் பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளது.

இதையறிந்த ஹரியாணா போலீஸார் பெருமாளின் உதவியுடன் கடத்தல்காரர்களை மடக்கிபிடிக்க திட்டமிட்டனர். இதன்படி டெல்லி ஆர்.கே.புரத்திலுள்ள மலைமந்திர் எனும் முருகன் கோயிலுக்கு கடத்தல் கும்பலை வரவழைத்தனர். அங்கு பணயத் தொகையை கொடுப்பது போன்று நாடகமாடி கடத்தல் கும்பலை போலீஸார் கைது செய்தனர். வீட்டில் இருந்து வில்வபதி, வினோத்குமார் ஆகியோரை மீட்டனர்.

இந்த கடத்தல் தொடர்பாக சென்னையை சேர்ந்த சிவக்குமார், மேற்குவங்க மாநிலத்தின் ஆசீப் உசேன், முகம்மது கரீம் டெல்லியின் சோனு, முகம்மது ஆஸாத் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியில் ஜிர்வானி பாபு எனப் பெயரை மாற்றிக்கொண்ட சிவகுமார், ஏற்கெனவே ஐந்திற்கும் மேற்பட்ட தமிழக தொழிலதிபர்களை கடத்தியதாக விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். இதற்காக அவர் மீது பல வழக்குகளும் பதிவாகி, 5 ஆண்டு சிறையில் இருந்துள்ளார். ஆசீப்பும் பல ஆள்கடத்தல் வழக்கில் சிக்கி 9 ஆண்டு தண்டனை அனுபவித்துள்ளார். மற்ற 3 பேரும் மீதும் பல்வேறு குற்ற வழக்குகளில் கைதாகியுள்ளனர்.

இதுகுறித்து ’இந்து தமிழ்’ நாளிதழிடம் ஐஜி சதீஷ் பாலன் கூறும்போது, ‘‘கைதானவர்களை திண்டுக்கல் போலீஸார் வந்து அழைத்துச் செல்ல உள்ளனர். தமிழக தொழிலதிபர்கள் பணத்திற்காக குருகிராமில் கடத்தப்படுவது 3 ஆண்டுகளில் இது 4-வது முறை. இதுபோன்ற வியாபாரங்களில் தமிழர்கள் அதிக கவனமாக இருப்பது நல்லது’’ எனத் தெரிவித்தார்.

இதுபோல் சமீப ஆண்டுகளாக தமிழக தொழிலதிபர்களை இலக்காக வைத்து ஆள்கடத்தல் நடக்கிறது. டெல்லி வரவழைத்து கடத்தப்பட்டவர்களில் பலரும் புகார் கூட தராமல் சில லட்ச ரூபாய்களை ஒப்படைத்தவர்களும் உண்டு.

இது குறித்து ‘இந்து தமிழ்’ நாளேட்டிடம் பாதிக்கப்பட்ட தமிழர்களில் சிலர் கூறும் போது, ‘எங்களை போன்று பாதிக்கப்பட்டவர்கள் தமிழக காவல் நிலையங்களில் புகார்களை உடனடியாகப் பதிவு செய்யாததுடன், நடவடிக்கை எடுப்பதிலும் சுணக்கம் காட்டப்படுவதே பணத்தை இழக்க காரணம். இந்த மோசடி, ஆள் கடத்தல் தொடர்பாக டெல்லி கும்பல்களுக்கு தமிழகத்தில் உள்ள சிலரே அடையாளம் காட்டி தகவல் அளிக்கின்றனர். இதில் தங்கள் உற்பத்தி பொருட்களை விற்க முடியாமல் தவிக்கும் தமிழக வியாபாரிகளே அதிகமாக சிக்குகின்றனர்’’ எனத் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் டிசம்பரில் இதுபோல் சிக்கிய தமிழக நூல் மில்லின் ஏ.ஜி.ஆனந்தன், லெனின் ஆகியோரை சிபிஐ மீட்டது. ரூ.25 லட்சம் கேட்டு கடத்திய கும்பலுக்கு தலைவனான அப்துல் முனாப், ஐஏஎஸ் தேர்விற்கு படித்து வந்தவர். கடத்தப்பட்டவர்கள் மீட்கப்பட்டுவிட்டாலும், மோசடி செய்யப்பட்டு ஏமாந்தவர்களின் தொகையை பெரும்பாலும் மீட்க முடிவதில்லை எனவும் புகார்கள் உள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.