நாயின் வாய்க்கு சங்கிலி பூட்டு போட்டு விட்ட விபரீத வில்லன்கள்..! போராடி மீட்ட சம்பவம்..!

சம்பளமில்லா காவலாளியாக இரவு பகலாக வீதியை காக்கும் நாய் ஒன்றை பிடித்து விபரீத எண்ணம் கொண்ட சிலர் அதன் வாயை இரும்பு சங்கிலியால் கட்டி வீதியில் பசியோடு அலையவிட்ட சம்பவம் சாத்தான்குளம் அருகே அரங்கேறி உள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அடுத்த தட்டார்மடம் கிராமத்தில் கிடைத்ததை சாப்பிட்டு விட்டு வீட்டையும், வீதியையும் காவல் காத்த நாய் ஒன்றின் வாய் சங்கிலியால் கட்டி பூட்டுப் போடப்பட்ட நிலையில் பரிதாபமாக வலம் வந்தது.

வாய் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருந்ததால் வாய் நிறைய சாப்பிட முடியாமல் கிடைத்ததை கொஞ்சமாக சாப்பிட்டுக் கொண்டு உயிரை கையில் பிடித்துக் கொண்டு வீதியில் சுற்றி திரிந்தது

இதனை பார்த்த நல்லுள்ளம் கொண்ட இளைஞர்கள் சிலர் சாத்தான்குளம் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். கடைவீதிக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அந்த நாய்க்கு நொறுக்கு தீனி போட்டு தங்களிடம் வரவைத்தனர்.

அந்த நாய் நொறுக்கு தீனியை சாப்பிட எத்தனித்துக் கொண்டிருந்த தருணம் தீயணைப்பு வீரர் ஒருவர் அந்த நாயின் பின்பக்கமாக சென்று இரு கால்களையும் பிடித்து தூக்கி சுற்றி அதன் சீற்றத்தை குறைத்தார்

பின்னர் அருகில் நின்ற வீரர்கள் அந்த நாயின் முகத்தை சாக்கு கொண்டு மறைத்து பூட்டப்பட்ட சங்கிலியை கவனமாக வெட்டி அகற்றினர். சங்கிலிகளை அகற்றியதும் விட்டால் போதும் என்று அந்த நாய் அங்கிருந்து ஓடிச்சென்றது.

நாயின் வாய்க்கு இப்படி சங்கிலியால் பூட்டு போட்ட விபரீத வில்லன்களுக்கு இது போல பூட்டு போட்டு விட்டால் சித்ரவதையின் கோர முகத்தை உணர்வார்கள்.

வீதியை காக்கும் விசுவாசமிக்க காவலாளிகளான நாய்களுக்கு உணவு போடாவிட்டாலும் பரவாயில்லை…அதன் வாயை கட்டி துன்புறுத்தும் விபரீத செயல்களில் ஈடுபடாதீர்கள் என்று தீயணைப்பு துறையினர் கேட்டுக் கொண்டனர்.

அதே நேரத்தில் வெறிப்பிடித்த நாய்கள் தெருவில் சுற்றினால் அவற்றை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளலாம்..ஆனால் வாயை கட்டி பசியோடு அலைய விடுவது கொடுமை என்பதை சம்பந்தப்படவர்கள் உணரவேண்டும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.