வனவிலங்கு என உடன் வந்தவரை சுட்டுக்கொன்ற வேட்டை கும்பல்

மூணாறு: கேரளா மூணாறு அருகே போதமேட்டில் ஏலத்தோட்டத்தில் புதைக்கப்பட்ட இருபது ஏக்கர் குடியை சேர்ந்த மகேந்திரன் 24, உடலை மீட்ட போலீசார், அவருடன் உடன் சென்ற வனவிலங்குகளை வேட்டையாடும் கும்பலே தவறுதலாக துப்பாக்கியால் அவரை சுட்டு கொன்றதையும் கண்டுபிடித்தனர்.

மலைவாழ் மக்கள் இனத்தை சேர்ந்த மகேந்திரனை 15 நாட்களாக காணவில்லை. ராஜாக்காடு போலீசில் 10 நாட்களுக்கு முன் உறவினர்கள் புகார் அளித்தனர். போலீசார் அப்பகுதி தனியார் தங்கும் விடுதிகளில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். 15 நாட்களுக்கு முன் இருபது ஏக்கர்குடியை சேர்ந்த சாம்ஜி 42, ஜோமி மற்றும் போதமேட்டை சேர்ந்த முத்தையாவுடன் மகேந்திரன் ஆட்டோவில் வந்து இறங்கும் காட்சி பதிவாகியிருந்தது.

சாம்ஜி உள்ளிட்ட மூவரையும் போலீசார் விசாரித்த போது பல்வேறு திடுக் தகவல் வெளியானது.சம்பவத்தன்று சாம்ஜி, மகேந்திரன் உள்ளிட்ட நால்வரும் வனவிலங்குகளை வேட்டையாட சென்றனர். இரவு மகேந்திரன் தனியாக சற்று துாரத்தில் விலங்களை தேடினார். மற்ற மூவரும் டார்ச் லைட் வெளிச்சத்தில் விலங்குகளை தேடினர். மகேந்திரன் அணிந்திருந்த கோட் பட்டன் வனவிலங்கின் கண்கள் போல டார்ச் லைட் வெளிச்சத்தில் மின்னியுள்ளது. இதனால் வனவிலங்கு என தவறாக புரிந்து கொண்ட மூவரும் துப்பாக்கியால் சுட்டதில் சம்பவ இடத்தில் மகேந்திரன் இறந்தார்.

இதை மறைக்க ஏலத்தோட்டத்தில் பள்ளம் தோண்டி புதைத்தது விசாரணையில் தெரிந்தது. மகேந்திரனை காணவில்லை என உறவினர்கள் புகார் அளித்த பிறகு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மூவரும் போலீசாருடன் தேடுதல் பணியில் ஈடுபட்டதாகவும், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாகவும் போலீசார் தெரிவித்தனர்.போதமேடு ஒற்றமரம் ஏலத்தோட்டம் ஒன்றில் மகேந்திரனின் உடல் குழிதோண்டி புதைக்கப்பட்டதை நேற்று காலை போலீசார் கண்டறிந்தனர். அவரது உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த அடையாளங்கள் இருந்தன என போலீசார் ஆய்வில் தெரிந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.