அட்டாக்கிங் பேட்டிங், பௌலிங் மூலம் கடந்த ஆட்டத்தில் பவர்பிளேவிலேயே இங்கிலாந்து அணியை நிலைகுலையச் செய்திருந்தது இந்தியா. விக்கெட்டுகள் ஒருபுறம் சரிந்தாலும் அதைச் சற்றும் பொருட்படுத்தாமல் தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினர் இந்திய பேட்டர்கள். ஹர்திக் பாண்டியா அரை சதத்தை அடித்திருந்தாலும் அவருக்கு முன் வந்த அனைவரின் அதிரடியாலும் ஆட்டத்தின் போக்கு இந்தியாவின் கையிலேயே இருக்குமாறு பார்த்து கொண்டனர்.
நேற்றைய ஆட்டத்தில் அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி, ரிஷப் பண்ட் அணிக்குத் திரும்புவதால் அவர்களின் அணுகுமுறையை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் போட்டி தொடங்குவதற்கு முன்பே ரசிகர்களுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. ரோஹித் ஷர்மாவும் விராட் கோலியே ஆட்டத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சர்ப்ரைஸ் என்ட்ரி கொடுத்தார் ரிஷப் பண்ட்!
பண்ட் இவ்வாறு ஒப்பனராகக் களமிறங்குவது இது முதல்முறை அல்ல. அவர் U-19 போட்டிகளில் விளையாடிய போது முழுநேர ஒப்பனராகதான் இருந்தார். அவ்விடத்தில் அதிரடியாக ஆடி சரமாரியாக ரன்களைக் குவித்துக்கொண்டிருந்தார். U-19 உலகக்கோப்பையில் அதிவேக அரைசதத்தை விளாசிய சாதனையும் பண்ட் வசமே உள்ளது. அந்த நேரத்தில் இந்திய U-19 அணிக்கு டிராவிட்தான் கோச் என்பதும் குறிப்பிடத்தக்கது. டிராவிட் இந்திய சீனியர் அணியின் முழுநேர கோச்சாக பதவியேற்ற பின்னர் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் போட்டி ஒன்றில் ஒப்பனராகக் களம் இறங்கியுள்ளார் ரிஷப் பண்ட். பண்ட்டின் சமீபத்திய டெஸ்ட் ஃபார்மை கருத்தில்கொண்டு இன்பீல்டுக்கு வெளியே அதிக பீல்டர்கள் இல்லாதபோது அவரது ஆட்டம் இன்னும் சிறப்பாக இருப்பதனால் கிடைக்கும் வாய்ப்பில் அவரை அந்த இடத்தில் ஆடவைத்து டிராவிட் பார்க்கிறார் என்பது புலப்படுகிறது.
இந்தப் புதிய ஜோடி இங்கிலாந்தின் பந்துவீச்சில் சற்றும் தொய்வுறாமல் மாறி மாறி பவுண்டரிகளைப் பறக்கவிட்டுக்கொண்டிருந்தது. ஆனால் கடந்த ஆட்டத்தை போலவே நேற்றும் சீரிய இடைவெளியில் விக்கெட்கள் விழத் தொடங்கின. ரோஹித் 30 ரன்களுக்கும் பண்ட் 26 ரன்களுக்கும் வீழ்ந்தனர். அதைத்தொடர்ந்து கோலி, சூர்யகுமார், ஹர்திக் ஆகிய அனைவரும் அடித்து ஆட முயன்று சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்தியாவின் இந்த ஆட்டமுறையை குறித்து கேள்விகள் எழாமல் இல்லை. ஆனால் அதன் பின்னே வந்த ஜடேஜா சரிந்த அணியை மீட்டு தேவையான அளவு ஸ்கோரை பதிவு செய்ய உதவினார்.
பவர்ப்ளேவை முழுவதுமாகப் பயன்படுத்தவேண்டும் என்ற இந்த புதிய அணுகுமுறை இந்திய அணியின் பந்துவீச்சிலும் பிரதிபலித்தது. கடந்த ஆட்டத்தை போலவே இம்முறையும் முதல் ஆறு ஓவர்களுக்குள்ளாகவே இங்கிலாந்து பேட்டர்களை மொத்தமாக அடி பணிய வைத்தனர் இந்திய பௌலர்கள். புவனேஸ்வர் குமார் தன் ஸ்விங் மாயாஜாலத்தைத் தொடர, அவரோடு சேர்ந்து பும்ரா, பாண்டியா கைகோக்க, இவர்களின் அட்டாக்கிற்கு இங்கிலாந்து பேட்டர்களிடம் எந்தப் பதிலும் இல்லை. அங்கே துவங்கிய ஆக்ரோஷத்தை மிடில் ஓவர்களிலும் தொடர்ந்து, கடந்த ஆட்டம் போலவே இங்கிலாந்தை ஆல் அவுட் ஆக்கி வென்று தொடரையும் கைப்பற்றியது இந்தியா.
மெதுவாக துவங்கி பின்னர் இறுதியில் சூடுபிடிக்கும் இந்தியாவின் ஆட்டமுறையைதான் நாம் காலங்காலமாக பார்த்துள்ளோம். ஆனால் ஆரம்பத்திலிருந்தே தாக்குதல் நடத்தும் இந்த ஆட்டமுறை இரண்டு ஆட்டங்களிலும் பல கேள்விகளையும் தாண்டி இந்தியாவிற்கு நன்கு கைகொடுத்துள்ளது.
இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மார்கன் “இந்,திய அணியினரின் ரிஸ்க் எடுக்கும் அப்ரோச் மிகவும் மாறியுள்ளது. அது பலவகையில் அவர்களுக்குக் கைகொடுக்கிறது” என்று கருத்து தெரிவித்தார்.
“இந்தியா இவ்வாறு தொடர்ந்து விளையாடினால் சில நேரங்களில் அவர்கள் சறுக்கல்களைச் சந்திக்க கூடும். ஆனால் இந்தப் பாதை தரமான கிரிக்கெட்டிற்கு வழிவகுக்கும்” என்கிறார் ஹர்ஷா போக்லே.
சீரிஸை வென்ற இந்திய கேப்டன் ரோஹித் பேசுகையில், இருபது ஓவர் உலகக்கோப்பையை குறித்து மிகவும் தன்னம்பிக்கையுடன் இருப்பதாகவும் அதற்கான சரியான அணி தயாராகி வருவதாகவும் கூறினார்.