கர்நாடகாவின், பள்ளியொன்றில் மாணவ – மாணவியருக்கு பாடத்துடன், வீர விளையாட்டுகள் கற்றுத்தரப்படுகிறது. அதி நவீன அர்ஜுனர்களாக உருவாகின்றனர்.சாம்ராஜ்நகரின், சந்தேமரனஹள்ளியில், வில் வித்தை, வாள் வீச்சு பயிற்சியளிக்கும் உறைவிட பள்ளி உள்ளது. இது போன்ற பயிற்சியளிக்கும், கர்நாடகாவின் ஒரே பள்ளியாகும். இதில் 45 மாணவர்கள் பயிற்சி பெறுகின்றனர்.
இங்கு பயிற்சி பெறும் மாணவர்கள், மாநில, தேசிய அளவில் திறமையை வெளிப்படுத்தியுள்ளனர்.இது எஸ்.டி., பிரிவு மாணவர்களுக்கு மட்டுமேயான பள்ளியாகும். மாநிலத்தின் பல்வேறு மாவட்டத்தின், எட்டாம் வகுப்பு முதல், பட்டப்படிப்பு வரையிலான மாணவர்கள் பயிற்சி பெற்று, பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.நாட்டில் ஜார்கண்டை தவிர, கர்நாடகாவில் மட்டுமே அரசு சார்ந்த இத்தகைய பள்ளி உள்ளது. எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரையிலான, எஸ்.டி., பிரிவு மாணவர்களை சேர்க்கலாம். 2016 — 17ல், ஐந்து ஏக்கரில் ஆர்ச்சரி மற்றும் பென்சிங் பயிற்சி உறைவிட பள்ளி அமைந்துள்ளது.
விசாலமான மைதானம், ஹாஸ்டல் வசதி, விளையாட்டுக்கு தேவையான கருவிகள் உள்ளது.சிறந்த பயிற்சியாளர்கள் மூலம், சர்வதேச தரத்துடன் வில் வித்தை, வாள் வீச்சு கற்றுத்தரப்படுகிறது. ஏற்கனவே பல மாணவர்கள், வில் வித்தையில் தேசிய அளவில் ஜொலிக்கின்றனர்.
இங்குள்ள மாணவர்களுக்கு தினமும் முட்டை, டிரை ப்ரூட், பழ ரசம், பால் வழங்குகின்றனர். வாரம் ஐந்து நாட்கள் இறைச்சி உணவு வழங்கப்படுகிறது.தினமும் 5:00 மணி முதல், 7:30 மணி வரை, மாலை 5:00 மணி முதல், இரவு 8:00 மணி வரை பயிற்சி பெறுகின்றனர். இடைபட்ட நேரத்தில் கல்வியையும் பெறுகின்றனர். இரவு உணவுக்கு பின்னரும், வில் வித்தை பயிற்சி நடக்கிறது. லோஹித், கார்த்திக் ஆகியோர் கடுமையான பயிற்சியளிக்கின்றனர்.மாணவர்களும் ஆர்வத்துடன் கற்கின்றனர். எட்டு விதமான வில் வித்தைகளை செய்து அசத்துகின்றனர். புராதன காலத்து கலைகளை, இப்பள்ளி காப்பாற்றுகிறது. நவீன அர்ஜுனர்களை உருவாக்குகிறது.
– நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement