கொழும்பு: நாங்கள் வறுமையில் வாட ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருந்தவர்கள் வாழ்க்கையை ரசித்து வாழ்ந்துள்ளார்கள் என்று ஆவேசப்படும் போராட்டக்காரர்கள் ஒரு சுமுகத் தீர்வு வரும்வரை அதிபர் மாளிகையைவிட்டு வெளியேறப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் மக்கள் முன்னெடுத்த மிகப்பெரிய போராட்டத்தின் விளைவாக அந்நாட்டின் அதிபர் கோத்தபய ராஜபக்ச பதவி விலகுவதாக அறிவித்தார். நாடே திரண்டு வந்ததுபோல் தலைநகர் கொழும்புவில் அதிபர் மாளிகையை நோக்கி நேற்று மக்கள் படையெடுக்க போலீஸும் ராணுவமும் செய்வதறியாது திகைத்தது. அதன் விளைவு பொதுமக்கள் அதிபர் மாளிகையை தம் வசப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வரும் 13ஆம் தேதி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக அதிபர் கோத்தபய ராஜபக்ச அறிவித்துள்ளார். அதுபோல் அனைத்துக் கட்சி ஆட்சி அமைப்பு சாத்தியப்பட்டவுடன் பிரதமர் பதவியை ராஜினாமா செய்வதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவும் அறிவித்துள்ளார்.
கட்டுகட்டாகப் பணம்; பதுங்கு குழி: நேற்று அவர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியாகின. அவற்றில் ஒரு வீடியோவில் மக்கள் அதிபர் மாளிகையில் இருந்து கட்டுக்கட்டாக பணத்தை எடுத்து எண்ணும் வீடியோ ஒன்றும் இடம்பெற்றுள்ளது.
அதில் ஒரு நபர் பணத்தை எண்ணுகிறார். சுற்றிலும் நிற்பவர்களில் ஒருவர் அழகாக பாலீத்தீன் பையில் சுற்றப்பட்ட பணத்தைக் காட்டுகிறார். பல கோடி மதிப்பிலான பணம் கண்டுபிடிக்கப்பட்டதாவும் அவற்றை பாதுகாப்புப் படையினர் மீட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Protesters found cash in the seized residence of Gotabaya #Rajapaksa, the president of #SriLanka. pic.twitter.com/OJ6gzdwCIF
— NEXTA (@nexta_tv) July 10, 2022
இன்னொரு வீடியோவில் அதிபர் மாளிகையில் இருந்த ரகசிய பதுங்கிடத்தை மக்கள் கண்டறிந்து அதன் உள்ளேயும் வீடியோ எடுத்து பரப்பியுள்ளனர்.
பியானோ வாசித்த இளைஞர்: “இப்படியொரு மாளிகையை பார்த்ததில்லை.. மாளிகைக்குள் தனது மகள், பேரப்பிள்ளைகளுடன் சென்ற 61 வயதான கைக்குட்டை விற்பனை செய்யும் மூதாட்டி பி.எம்.சந்திரவதி, ”நான் என் வாழ்நாளில் இதுபோன்றதொரு மாளிகையை பர்த்ததில்லை. நாங்கள் பசியில் வாடிக் கொண்டிருக்கும்போது அவர்கள் எத்தனை சொகுசாக வாழ்ந்துள்ளன என்பதைப் பார்த்து வேதனையடைந்தோம்” என்றார்.
மாளிகைக்குள் சென்ற அரசு ஊழியரான குமாரா, “அதிபர் கோத்தபய ராஜபக்ச சொன்னதுபோல் புதன் கிழமை பதவியை ராஜினாமா செய்வாரா என்று எதிர்பார்த்துள்ளேன். அவர் அப்படிச் செய்யாவிட்டால் நான் இங்கு மீண்டும் வருவேன். இங்கேயே தங்கிவிடுவேன்” என்றார்.
மாளிகைக்குள் இருந்த பியானோவில் ஆடியோ பொறியாளரான சமீரா கருணாரத்னே இலங்கையின் பிரபல பாப் பாடல்களை இசைத்தார். நேற்று அதிபர் வீட்டு நீச்சல் குளத்தில் நீந்திய பொதுமக்கள் இன்று அந்தப் பக்கமே செல்லவில்லை. நீச்சல் குளம் அழுக்கி நிரம்பி நிறமே மாறிவிட்டது. என்ன நடந்தாலும் சரி, ஆக்கபூர்வமான மாற்றம் வரும்வரை அதிபர் மாளிகையைவிட்டு வெளியேறப்போவதில்லை என போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.
ஐஎம்எஃப் ஆலோசனை: இத்தகைய சூழலில் அடுத்தது என்ன என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. நிதி நெருக்கடியால் சின்னாபின்னமாகியுள்ள இலங்கைக்கு உதவிக்கரம் நீட்டுவது குறித்து சர்வதேச நிதியம் (ஐஎம்எஃப்) ஆலோசனைகளை மேற்கொண்டுள்ளது. இதுவரை கொள்கை அளவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் மூன்று கட்டப் பேச்சுவார்த்தைகளை ஐஎம்எஃப் நடத்தியுள்ளது. மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்கேவும் இலங்கையை மீட்பதற்கான நிதித் திட்டங்கள் முடிவு செய்யப்பட்டுவிட்டது என்று நம்பிக்கை தரும் தகவலைக் கூறியுள்ளது.
இலங்கைக்கான ஐஎம்எஃப் தலைவர் பீட்டர் ப்ரூரர் கூறுகையில், ”இலங்கையின் தற்போதைய சிக்கலைத் தீர்ப்போம் என நம்புகிறோம். பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கக் காத்திருக்கிறோம். அதன்பின்னர் ஐஎம்எஃப் ஆதரவுத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும். நிதித்துறை மற்றும் மத்திய வங்கி அதிகாரிகளுடன் சில விஷயங்களை ஆலோசிக்க வேண்டியுள்ளது” என்றார்.