உயிரைப் பறிக்குமா உடலுறவு? – காமத்துக்கு மரியாதை S 2 E 28

‘நாக்பூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், காதலியுடன் உறவு கொள்ளும்போது ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு உயிரிழந்து விட்டார்’ என்ற சமீபத்திய செய்தி, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது. இறந்தவர் இளைஞர் என்பதால், ‘உயிரைப் பறிக்குமா உடலுறவு’ என்று இளவயதினர் அதிர்ந்து போயிருக்கிறார்கள்.

நடுத்தர வயதுக்காரர்களும், இதயத்தில் பிரச்னை இருப்பவர்களும் ‘இப்படி நிகழாமல் இருக்க என்ன செய்வது’ என்று தவித்துக் கொண்டிருக்கிறார்கள். உடலுறவின்போது ஹார்ட் அட்டாக் வருவதற்கு யாருக்கெல்லாம் வாய்ப்பிருக்கிறது; அவர்கள் எப்படியெல்லாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பது பற்றி விளக்கமாகப் பேசுகிறார் பாலியல் மருத்துவர் காமராஜ்.

காமத்துக்கு மரியாதை

ஓடும்போதும், நடக்கும்போதும் நம் உடலுக்கு எந்தளவுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுகிறதோ, அதேபோல உடலுறவு கொள்ளும் போதும் உடம்பில் ஒரு ஸ்ட்ரெஸ் ஏற்படத்தான் செய்யும். ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்த 4472 பேர்களில், 34 பேர் தாம்பத்திய உறவு வைத்துக்கொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக, அமெரிக்காவின் ஹார்ட் அசோசியேஷனின் ஆராய்ச்சி ஒன்று சொல்கிறது.

இந்த ஆராய்ச்சி, 2017-ல்தான் நடைபெற்றது. இந்த 34 பேரில் 32 பேர் ஆண்கள்; 2 பேர் பெண்கள். இதயத்தில் பிரச்னை இருந்தாலும், ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்திருந்தாலும் உறவின்போது மரணம் நிகழ்வதற்கான வாய்ப்பு பெண்களுக்கு மிக மிகக் குறைவுதான்.

உடலுறவில், உச்சகட்டம் என்கிற ஆர்கசம் அடையும்போது உடல் முழுக்கவே ஒரு பரவச நிலையில் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதயத்துடிப்பும் அதிகரிக்கும். இந்த நேரத்தில் அபூர்வத்திலும் அபூர்வமாக மாரடைப்பு வரலாம்.

ஹார்ட் ஃபெயிலியர், ஹார்ட் அட்டாக் வந்தவர்கள், பைபாஸ் செய்து கொண்டவர்கள், இதயத்தில் ஸ்டென்ட் வைத்துக் கொண்டவர்கள், இதயத்தில் வேறு ஏதேனும் பிரச்னை இருப்பவர்கள் அவர்களுடைய மருத்துவரிடம் ‘தாங்கள் உடலுறவு வைத்துக் கொள்வது’பற்றி தெளிவான ஆலோசனையைக் கேட்ட பிறகே உறவுக்கு முயல வேண்டும்.

டாக்டர் காமராஜ்

ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்திருந்தால் குறைந்தபட்சம் இரண்டு மாதங்களுக்கு செக்ஸ் வைத்துக்கொள்ளக் கூடாது. மீறி உடனடியாக உறவுகொண்டு ஆர்கசம் அடைந்தார்களென்றால் மறுபடியும் ஹார்ட் அட்டாக் வருவதற்கு வாய்ப்பிருக்கிறது.

அப்படியே இரண்டு மாதங்கள் கழித்து செக்ஸ் வைத்துக் கொள்ளலாம் என்றாலும், ஒரு சிறிய பரிசோதனை மூலம் அதை சோதித்து தெரிந்து கொண்ட பிறகே உறவுக்கு முயல வேண்டும். அதாவது, இரண்டு மாடிகள் வரைக்கும் மூச்சுவிட கஷ்டப்படாமல் அவர்களால் ஏற முடிந்தால் அவர்கள் உறவு வைத்துக் கொள்ளலாம். ஒருவேளை மூச்சுவிட சிரமப்பட்டால், மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டு இன்னும் சில காலத்துக்கு தாம்பத்திய உறவைத் தவிர்ப்பதே நல்லது.

ஹார்ட் பிரச்னை இருப்பவர்களும் ஹார்ட் அட்டாக் வந்தவர்களும் உறவுகொள்ளும் போதும், தலையணைக்குக் கீழே நாக்கு அடியில் வைக்கக்கூடிய மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனையின் பேரில் வைத்துக்கொள்வது நல்லது. உடலுறவின் போது திடீரென நெஞ்சு வலிப்பதுபோல இருந்தால், உடனே மாத்திரையை எடுத்து நாக்குக்கு அடியில் வைத்துக்வ்கொள்ள வேண்டும். இப்படிப்பட்டவர்கள் அளவுக்கு அதிகமாக ஆர்வத்துடனும் விநோதமான பொசிஷன்களிலும் உறவுகொள்ள முயல்வது கூடாது.

காமத்துக்கு மரியாதை

புது பார்ட்னருடன், ஹோட்டல் போன்ற வெளியிடங்களில் செக்ஸ் வைத்துக்கொள்ளும்போது பதற்றமும் த்ரில்லும் அதிகமாக இருக்குமென்பதால், ஹார்ட் அட்டாக் ஏற்படலாம். இதுவே வீட்டில், மனைவியுடன் உறவுகொள்கையில் பதற்றம் இருக்காது என்பதால், ஹார்ட் அட்டாக் வருவதற்கான வாய்ப்புகள் மிக மிகக் குறைவே.

ஏற்கெனவே ஹார்ட் அட்டாக் வந்ததில்லை; ஆனால், துரதிர்ஷ்டவசமாக உறவுகொள்ளும்போது இருவரில் உறவுக்கு நெஞ்சுவலி வந்தால், உடனே சி.பி.ஆர். என்கிற முதலுதவியை செய்ய வேண்டும். அந்தச் செய்தியில் சம்பந்தப்பட்ட நபர் மது அருந்தியதோடு, அளவுக்கு அதிகமாக வயாகரா சாப்பிட்டதாகவும் தெரிகிறது. அதனால், மற்றவர்கள் அவருடன் ஒப்பிட்டு நமக்கும் உடலுறவின் போது மாரடைப்பு வருமோ என்று பயப்பட தேவையில்லை” என்றார் டாக்டர் காமராஜ்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.