வேலூர் சிப்பாய் புரட்சி 216-வது நினைவு தினத்தை முன்னிட்டு, வேலூர் கோட்டை அருகே இன்று காலை அலங்கரிக்கப்பட்ட சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது,
“நம் பாரத நாட்டிற்காக இந்த மண்ணில் ஆயிரக்கணக்கானோர் ரத்தம் சிந்தியுள்ளனர். இவர்களுக்கு பாரத நாடு முழுவதும் நன்றி செலுத்துவோம். சிறந்த பாரதம் மற்றும் சிறந்த தமிழ்நாடு உருவாக்க வேண்டும். இதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.
ஆங்கிலேயர்கள் வருவதற்கு முன்னே நாம் கல்வியில் சிறந்து விளங்கினோம். 1800-ஆம் ஆண்டில் வில்லியம் பெனிடிக் இந்திய கல்வியை ஆராய குழு அமைத்தார். அந்த ஆராய்வின் போது இந்தியா கணக்கு, வரலாறு, கலை, வானியல் போன்ற படிப்புகளில் மேலோங்கி இருந்தது.
பல ராஜாக்கள் நம்மை ஆண்டிருந்தாலும் நாம் ஒரே குடும்பமாகவே இருந்தோம் ஆங்கிலேயர்கள் தான் நம்மை பிரித்தாண்டார்கள். விந்திய மலையை மையமாகக் கொண்டு வடக்கில் உள்ளவர்கள் ஆரியர்கள் என்றும், தென்பக்கம் உள்ளவர்கள் திராவிடர்கள் என்றும் இருந்தது. இதற்கு முன்பு மகாராஷ்டிரா உட்பட தென்பக்கம் திராவிட நாடாக இருந்தது. இது ஒரு புவியியல்.
ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போது 600 நாடுகளாக பிரிய இருந்தது. அதை ஒன்று சேர்த்தவர் இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேல். ஆரியம், திராவிடம் போன்றவை இனம் சார்ந்தவை அல்ல இடம் சார்ந்தது மட்டும் தான். அதுவும் ஆங்கிலேயர்களின் சூழ்ச்சியால் உருவாக்கப்பட்டது”. என்று அவர் தெரிவித்திருந்தார்.