இயக்குனர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் நடிகை சாய் பல்லவி நடித்துள்ள ‘கார்கி’ திரைப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். படத்தை சூர்யா, ஜோதிகாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் வழங்கவுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய 3 மொழிகளில் தயாராகி வரும் இப்படம், வருகிற 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் குறித்தும், தன் தனிப்பட்ட திரை அனுபவம் குறித்தும் `புதிய தலைமுறை’க்கு நடிகை சாய் பல்லவியை பேட்டி கண்டோம்.
“கார்கி படத்தில் நீங்க நடிக்க ஓகே சொல்ல முக்கிய காரணம்?”
என் கதாபாத்திர வடிவமைப்பும், படத்தின் மூலமா இயக்குநர் சொல்ல வர விஷயமும் தான் காரணம். இந்தப் படத்தின் மூலமா அவர் சொல்ல வர்ற கருத்து, நானும் அதிகம் யோசிக்கக்கூடியது. இதனாலதான் முக்கியமா இந்தப் படத்தை பண்ணினேன்”
“மலர் டீச்சருக்கு அப்றம் ஒரு டீச்சர் கதாபாத்திரம்..! அந்தக் கதாபாத்திரம் போல க்யூட்டா இந்தப் படமும் இருக்குமா?”
“அப்படி சொல்ல முடியாது. சொல்லப்போனா, இந்தப் படத்துல என்னோட கதாபாத்திரம் டீச்சர் என்பதைத்தாண்டி அந்தக் கதாபாத்திரம் கடந்துவர்ற பாதை ரொம்ப பெருசாவும், ஆழமாவும் இருக்கும்”
“கார்கி படம், அப்பா – மகளுக்கான திரைப்படம். இந்த தருணத்துல, உங்களுக்கும் அப்பாக்குமான உறவு பத்தி சொல்லுங்க..”
“நான் சின்ன வயசுல அம்மா செல்லம். ஆனா வளர்ந்தபிறகு, அப்பாதான் என்னோட பெஸ்ட் ஃப்ரெண்ட். எதுனாலும் ஷேர் பண்ணிக்கலாம், எவ்ளோ வேணும்னாலும் சண்டை போடலாம்ன்ற அளவுக்கு அப்பாவும் நானும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம்”
“சியாம் சிங் ராய், லவ் ஸ்டோரி, பாவக்கதைகள் என எல்லா படங்கள்லயும் இன்றைய பெண்கள் சந்திக்கிற பிரச்னைகளை மையப்படுத்திய கதாபாத்திரங்களையே ஏத்து நடிச்சிருக்கீங்களே… இந்த மாதிரியான படங்களை யோசிச்சு பண்ணீங்களா?”
“அப்படி இல்ல. சில படங்கள் தான் அப்படி செய்வேன். உதாரணத்துக்கு, பாவக்கதைகள் அப்படி யோசிச்சு பண்ண படம். மற்றபடி பிற படங்களெல்லாம் தானா அமைஞ்சதுதான். அதுவும் காதல் கதைகளாத்தான் யோசிச்சு நான் பண்ணேன். ஆனா ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் ஒவ்வொரு கதை இருக்கும். அப்படித்தான் அந்தப் படங்கள் யாவும் அமைஞ்சது. பெண்களோட பிரச்னைகள்னு யோசிச்சு இந்த கேரியரை நான் அமைச்சுக்கல”
“தமிழ்ல ஏன் நிறைய படங்கள் பண்றதில்லை? பெரிய கேப் விட்டு விட்டு படம் பண்றீங்களே?”
“என்னை பொறுத்தவரை எங்கலாம், எப்போலாம், என்ன மாதிரியான கதைகளெல்லாம் எனக்கு தேவைப்படுதோ அதுக்கு ஓகே சொல்லி படம் பண்ணிடறேன். மற்றபடி மொழிகள் பற்றி யோசிக்கிறதில்லை. நான் ஒரு கதைக்கு ஓகே சொல்னும்னா, கதை நல்லாருக்கணும். போலவே நான் அந்த கதைக்கு செட் ஆகணும். சில நேரத்துல, சில கதைகளுக்கு நான் செட் ஆகமாட்டேன். அப்படியான சூழல்கள்ல நான் அதை தவிர்த்திடுவேன், இல்ல அந்தப் படங்களெல்லாம் மிஸ் ஆகிடும்.”
“கார்கி பட செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்ய லக்ஷ்மி உங்களை பற்றி எமோஷனலா பேசியிருந்தாங்களே…”
“அவங்க இந்தப் படத்தோட தொடக்கத்துல இருந்தே படக்குழுவோட தொடர்புல இருக்காங்க. படத்துக்காக நிறைய வேலைகள் செஞ்சிருக்காங்க. அப்படி பார்த்தா இது அவங்களோட படம். எப்படி இயக்குநரோட படமோ… அப்படி இது ஐஸ்வர்ய லக்ஷ்மியோட படமும் தான். கார்கி படம், இயக்குநருக்கு எவ்ளோ ஸ்பெஷலோ, படக்குழுவினர் ஒவ்வொருவருக்கும் எவ்வளவு ஸ்பெஷலோ… அப்படித்தான் ஐஸ்வர்யாவுக்கும். செய்தியாளர் சந்திப்பில் ஐஸ்வர்யா அழுததுக்கு காரணமும் அதுதான். அந்த நாள், அவங்க உழைப்புக்கு அங்கீகாரம் கிடைச்ச நாள்.! அந்த எமோஷன்லதான் அவங்க அழுதுட்டாங்க. மற்றபடி அதுக்கான கிரெடிட் எனக்கு வராது”
“இதுவரை நீங்க பணியாற்றிய இயக்குநர்கள் பற்றி, ஒவ்வொரு கருத்து சொல்லனும்னா என்ன சொல்வீங்க?
“அல்போன்ஸ் புத்திரன் – எளிமையான மனிதர்
சேகர் கமூலா – குழந்தைத்தனமான இன்னசென்ஸ் உள்ள ஒருவர்!
எல்.விஜய் – உதவிக்கரம்
பாலாஜி மோகன் – நண்பர் மாதிரி
செல்வராகவன் – கொஞ்சம் பயம். ஆனா நிறைய கத்துக்க முடியும்
வெற்றிமாறன் – கமர்ஷியலா கூட ஒரு சீரியஸ் விஷயத்தை சொல்லக்கூடியவர்
கௌதம் ராமச்சந்திரன் – டிசிப்ளின்!”
“உங்க பார்வையில அழகென்பது எது? பெண்ணுக்கு எது அழகு”
“நம்மோட குணம்தான் அழகு! உங்க வைப் தான் என்னை உங்களை நோக்கி என்னை ஈர்க்கும். அதுதான் அழகு. மத்தபடி, பார்த்தவுடனே ஈர்க்கப்படறதெல்லாம், அழகுன்னு இல்ல. பெண்களை பொறுத்தவரை, அவங்களோட தைரியம்தான் அவங்களுக்கு அழகு!”