வந்தாரை வாழவைக்கும் தமிழகம்; வந்தாரை ஆள வைக்கும் தமிழகம்: இயக்குநர் பேரரசு பேச்சு

'பளபள பப்பாளிக்கா' என்கிற வீடியோ ஆல்பம் பாடல் வெளியீடு மற்றும் 'ஒவ்வொன்றும் ஒரு விதம் 'பட அறிமுக விழா என இரண்டும் இணைந்த ஒரு விழா பிரசாத் லேப் திரையரங்கில் நடைபெற்றது. அந்த வீடியோ ஆல்பம் பாடலை ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இசை அமைப்பாளர் அருண் குமாரசாமி இசையில், பாடகி வைக்கம் விஜயலட்சுமி பாடியிருக்கிறார். பாடலாசிரியர் அஸ்மின் வரிகளை எழுதியுள்ளார். கம் லீஃப் என்டர்டெய்ன்மெண்ட் சார்பில் சுமதி குமாரசாமி தயாரித்துள்ளார். தினேஷ் வைரா இயக்கி உள்ளார்.

இவ்விழாவில் இயக்குநர் பேரரசு, இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, ராசய்யா பட இயக்குநர் ஆர். கண்ணன், நடிகர் காதல் சுகுமார், நடிகை காயத்ரி ஷாம் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் இயக்குநர் பேரரசு பேச ஆரம்பித்ததும் ராஜ்யசபா எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டுள்ள இளையராஜாவுக்கு முதலில் வாழ்த்து தெரிவித்தார்.

பிறகு அவர் பேசியதாவது: திருப்பாச்சி படத்தில் பட்டாசு பாலு, சனியன் சகடை, பான்பராக் ரவி என்ற அந்த மூன்று வில்லன்கள் பாத்திரங்களில் நடிப்பதற்கு ஆட்கள் தேடிய போது, இரண்டு பாத்திரங்களுக்கு ஆட்களைப் பிடித்து விட்டோம். மூன்றாவது அந்த சனியன் சகடைக்கு மட்டும் ஆட்களைக் தேடிக் கொண்டிருந்தோம். அந்த வில்லன் பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரியான பெரிய கனத்த உருவம் ஒன்று, ஒரு நாள் மாலை பிரசாத் லேபிலிருந்து எதிரே சாலையில் கடந்ததைத் தூரத்தில் நின்று பார்த்தேன். இவர்தான் சரியாக இருக்கும் என்று நான் உதவி இயக்குநர்களை விட்டு விசாரித்து வரச் சொன்னேன். போய்ப் பார்த்தால் அவர்தான் ஸ்ரீகாந்த் தேவா என்றார்கள். பதறிப் போய் விட்டேன். அப்படிப்பட்ட உருவத்துக்குச் சொந்தக்காரர் அவர்.

பிறகுதான் 'சிவகாசி' படத்தில் அவரை இசையமைப்பாளராகத் தேர்வு செய்தேன். அந்தப் படத்தில் வரும் என்னத்த சொல்வேனுங்க, கோடம்பாக்கம் ஏரியா பாடல்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. பழனி படத்திற்கு பழனி மலை அடிவாரத்தில் தங்கியும் திருவண்ணாமலை படத்திற்கு கிரிவலப் பாதையில் ஓரிடத்தில் தங்கியும் பாடல்களை உருவாக்கினோம். அப்போது அடுத்து வெளிநாட்டின் பெயராக வையுங்கள், வெளிநாடு செல்லலாம் என்று கூறினார்.

இங்கே இந்தப் பாடல் ஆல்பம் வெளியீட்டு நிகழ்ச்சியே தயாரிப்பு நிறுவனத்தின் அறிமுக விழாவாகவும் இருக்கிறது. இங்கே வந்துள்ள தயாரிப்பாளர், இசையமைப்பாளர் அருண் குமாரசாமி ஆஸ்திரேலியாவில் இருந்து வந்தாலும் அவர் இலங்கைக்காரர். அவரை வரவேற்போம். இலங்கைத் தமிழர்கள் தான் நல்ல சுத்தமான தமிழைப் பேசித் தமிழைக் காப்பாற்றுகிறார்கள். ஆனால் அவர்களை நாம் காப்பாற்றாமல் விட்டு விட்டோம். கண்டிப்பாக அங்கே இன்றுள்ள நிலைமைகள் மாறும். அங்குள்ள நெருக்கடி நிலை மாறும். அங்குள்ள மக்களை சிங்களர், தமிழர் என்று பார்க்காமல் அதையும் தாண்டி இலங்கையில் உள்ள மனிதர்கள் என்று காப்பாற்ற இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழகம் வந்தாரை வாழவைக்கும். தமிழர்கள் வாழ்கிறார்களோ இல்லையோ தமிழர்கள் வந்தாரை வாழவைப்பவர்கள். அதேபோலத் தமிழர்கள் ஆள்கிறார்களோ இல்லையோ, வந்தாரை ஆளவைப்பவர்கள். எனவே தமிழர்களாகிய இவர்களையும் வரவேற்று வாழ்த்துவோம்” என்று இயக்குநர் பேரரசு பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.