காவிரி பிறப்பிடமான குடகில் 2018ல் கன மழை பெய்தது மட்டுமின்றி, நிலச்சரிவு ஏற்பட்டு பலரது வீடுகள் அடித்து செல்லப்பட்டன. வாழ்வதற்கு இடமின்றி பலரும் தவித்த நேரமது. மகளிர், குழந்தைகள், முதியோர் என நுாற்றுக்கணக்கான குடும்பங்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
அந்த முக்கியமான கால கட்டத்தில், அரசும் வீடுகள் இழந்தோருக்கும், மலை பகுதியில் ஆபத்தான நிலையில் வசிப்போருக்கும் வீடுகள் கட்டி தருவதாக உறுதியளித்து விட்டது. தரை தளம், அதன் மீது இரண்டு மாடி கொண்ட கட்டடம் கட்டி அதில் அனைவரையும் வசிக்க ஏற்பாடு செய்ய அரசு திட்டமிட்டது.அப்போது, ராஜிவ்காந்தி வீட்டு வசதி வாரிய நிர்வாக இயக்குனராக இருந்த அன்புகுமார் ஐ.ஏ.எஸ்., அதிகாரி, தனி ஒரு திட்டம் தீட்டினார். அதாவது அடுக்குமாடி குடியிருப்பு கட்டுவதை விட, ஒவ்வொரு குடும்பத்துக்கும் சகல வசதிகளுடன் தனி தனி வீடு கட்டினால் பயனுள்ளதாக இருக்கும் என்று அரசுக்கு ஆலோசனை கூறினார்.
குடும்பங்களுக்கு வாழ்வு
அதற்கு ஆகும் செலவு, வரைபடம், முழு திட்ட அறிக்கை தயாரித்த போது, ஏறத்தாழ அடுக்குமாடியிருப்புக்கும், தனி வீடு கட்டுவதற்கும் பெரிய வித்தியாசம் தென்படவில்லை. மேலும் குடகு என்பது மலை பகுதி என்பதால், பிற்காலத்தில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அரசுக்கு உணர்த்தினார்.அரசும் அவரது திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்து, வீடுகள் கட்ட அனுமதியளித்தது. ஒன்றை ஆண்டில் 800 தனி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன.
ஒவ்வொரு வீட்டிலும், இரண்டு படுக்கை அறைகள், சமையல் அறை, கழிப்பறை, மாடிக்கு படிகட்டுகள், தண்ணீர் டேங்க் என பல வசதிகள் செய்யப்பட்டுள்ளது.இதை பயனாளிகளிடம் ஒப்படைத்த போது, நாட்டில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு வீடு கட்டி கொடுத்திருப்பதாக ஆனந்த கண்ணீர் வடித்தனர்.
முதல் ஷூ
இத்தகைய பாராட்டுக்குரிய அன்புகுமார், வேலுார் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, சின்னப்பள்ளி குப்பம் என்ற கிராமத்தை சேர்ந்தவர். மெட்ராஸ் கிறித்துவ கல்லுாரியில் எம்.ஏ., வரலாறில் முதுகலை பட்டம் பெற்று, 2004ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியானார்.தந்தை போலீஸ் ஏட்டு, வறுமையில் வாடிய குடும்பத்தில் பிறந்தவர் என்பதால், ஐ.ஏ.எஸ்., நேர்முக தேர்வின் போது முதல் முறையாக ஷூ அணிந்தது குறிப்பிடத்தக்கது.
அவர் அதிகாரியானதும், பெற்றோருக்கு பேரானந்தம். மொத்த கிராமமே கொண்டாடியது.பல்லாரியில் பயிற்சி முடித்து விட்டு, ஷிவமொகா மாவட்ட பஞ்சாயத்து தலைமை செயல் அதிகாரியாக பணியில் சேர்ந்தார். ராய்ச்சூர், பெலகாவி, ஹாசன், ஹாவேரி மாவட்ட கலெக்டராக மக்களின் பிரச்னைகளுக்கு முன்னுரிமை வழங்கினார்.
வெள்ள பாதிப்பு
ராய்ச்சூர் கலெக்டராக இருந்த போது, 2009ல் வரலாறு காணாத அளவுக்கு கடும் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. 54 கிராமங்கள் வெள்ளத்தில் தத்தளித்தது. இரவு, பகல் பாராமல் அங்கு தவித்த மக்களை பாதுகாப்பான இடத்துக்கு இடம் மாற்றம் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தார்.அனைத்து தாலுகாகளின் மாநில நெடுஞ்சாலைகள், கிராமங்களின் சாலைகள் விரிவாக்கம் செய்து மேம்படுத்தினார்.உணவு மற்றும் பொதுவினியோக துறை, கல்வி துறை, பெங்களூரு மாநகராட்சி, பி.எம்.டி.சி., என பல்வேறு துறைகளில் பணி புரிந்தார்.
தமிழ் மொழி பற்று
தற்போது கே.எஸ்.ஆர்.டி.சி., நிர்வாக இயக்குனராக இருக்கும் அவர், பல காரணங்களால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டோர், டிஸ்மிஸ் செய்யப்பட்டோர், நீண்ட காலமாக பணிக்கு வராதோர் என 10 ஆயிரத்துக்கும் அதிகமானோரை மீண்டும் பணியில் அமர்த்தி வாழ்வழித்தவர்.தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்ட அவர், தமிழர்களை பார்த்தவுடன் அன்புடன் உபசரித்து, சிரித்த முகத்துடன் பேசுவார். தன் மகனுக்கு அகிலன் என பெயர் சூட்டி, தமிழ் மொழியின் பற்றை வெளிப்படுத்தியுள்ளார். உலக பொதுமறை திருக்குறள் எந்த அதிகாரத்தையும், குறளையும் கேளுங்கள் சொல்கிறேன் என பெருமையுடன் சொல்கிறார்.
-நமது நிருபர் –
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்