உங்களுடைய செலுத்தப்படாத மின் கட்டணத்தை செலுத்த இந்த எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு எஸ்.எம்.எஸ் வந்துள்ளதா? அல்லது உங்கள் மின்சாரம் துண்டிக்கப்படும்? ஜாக்கிரதை என்று குறுஞ்செய்தி வந்துள்ளது என்றால் அது உங்கள் வங்கிக் கணக்கில் இருக்கும் பணத்தைப் பறிப்பதற்கான ஏமாற்றுவேலை. அதனால், பொதுமக்கள் எச்சரிக்கையாக இருங்கள்.
சென்னையில் வசிக்கும் மக்களுக்கு கடந்த ஒரு வாரமாக தெரியாத எண்களில் இருந்து உங்களுடைய மின் கட்டணம் செலுத்தப்படாததால் இரவு 10:30 மணிக்குள் மின்சாரம் துண்டிக்கப்படும் என ஒரே மாதிரியாக போலியான எஸ்.எம்.எஸ் வருகின்றன. அந்த குறுஞ்செய்திகள் ‘EB ஆபீஸிலிருந்து’ வந்திருப்பதாகவும் அதில் கொடுக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்ளும்படியும் அந்தக் குறுஞ்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சென்னை மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்த ஒருவர், தனக்கு மின் கட்டணம் பாக்கி எதுவும் இல்லாத போதிலும் வெள்ளிக்கிழமை எஸ்.எம்.எஸ் வந்ததாகக் கூறினார். மேலும், அவர் அந்த எண்ணை தொடர்புகொள்ள முயற்சி செய்ததாகவும் ஆனால், யாரும் பதிலளிக்கவில்லை என்று தெரிவித்துள்ளா.ர் மேலும், உள்ளூர் மின்சார வாரிய அலுவலகத்திற்கு தொடர்புகொள்ள முயற்சித்ததாகவும் அவர்களிடமும் எந்த பதிலும் இல்லை என்று அவர் கூறினார்.
சென்னை தண்டையார் பேட்டையைச் சேர்ந்த சுரேஷ் சோமசுந்தரம் ஒரு ஆங்கில ஊடகத்திடம் கூறுகையில், மின் கட்டணம் இன்னும் செலுத்தாததால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள் என்று குறுஞ்செய்தி வந்ததாகவும் அந்த எண்ணுக்கு எண்ணுக்கு அழைத்தபோது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கூகுள் பே கணக்கில் 1500 செலுத்தக் கூறிதாகத் தெரிவித்தார். மேலும், அவர் தனது வீட்டு மின் கட்டணத்தை ஏற்கெனவே செலுத்திவிட்டேன் என்று அவர்களிடம் தெரிவித்தேன்” என்ரு கூறினார்.
ஏற்கெனவே மின் கட்டணம் செலுத்திவிட்ட மீனாட்சி என்பவருக்கு, மின் கட்டணம் செலுத்தவில்லை, உடனடியாக மின் கட்டணத்தை செலுத்துங்கள். இலையென்றால் உங்கள் இன் இணைப்பு துண்டிக்கப்படும். உடனடியாக இந்த எண்ணுக்கு அழையுங்கள் என்று எஸ்.எம்.எஸ் வந்ததைத் தொடர்ந்து, அவர் அருகே உள்ள மின்சார வாரிய அலுவலகத்திற்குச் சென்று எஸ்.எம்.எஸ்-ஐ காட்டி விசாரித்துள்ளார். அதற்கு அலுவலர்கள். இது போலியான எஸ்.எம்.எஸ் இப்படியான எஸ்.எம்.எஸ்-களை புறக்கணியுங்கள் என்று கூறியுள்ளனர்.
சென்னையில் பொதுமக்கள் பலருக்கும் இதுபோல, மின் கட்டணம் செலுத்தவில்லை. உடனடியாக மின் கட்டணம் செலுத்துங்கள் என்று போலியான எஸ்.எம்.எஸ் அனுப்பப்பட்டுள்ளது. இவை எல்லாமே போலியான செய்தி என்பதை உறுதி செய்து டான்ஜெட்கோ இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த எஸ்.எம்.எஸ்-கள் மின்சார வாரியத்தில் இருந்து அனுப்பப்படவில்லை என்று கூறியுள்ளது. “இதுபோன்ற எஸ்.எம்.எஸ்-களுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று மின் நுகர்வோரை கேட்டுக்கொள்கிறோம்” என்று கூறப்பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் மின் கட்டணத்தை டான்ஜெட்கோ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் பணம் செலுத்த வேண்டும் அல்லது EB அலுவலகத்தில் பணம் செலுத்த வேண்டும்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், “டான்ஜெட்கோ எந்த தொலைபேசி எண்ணில் இருந்தும் மின் கட்டணத்தை செலுத்துங்கள் என்று செய்தி அனுப்புவதில்லை. நாங்கள் மெயில் மூலமாகவும், டான்ஜெட்கோ மெசேஜ் ஹெடர் மூலமாகவும் எஸ்.எம்.எஸ் மூலம் தகவல் அனுப்புகிறோம்” என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் அதிகரித்து வருவதால், இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்களைப் பாதுகாக்க டான்ஜெட்கோ வழக்கமான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“