மதுரை மாவட்டம், நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்த முத்துமுருகன் – அனிதா செல்வி தம்பதியின் குழந்தைகள் சிவகுருநாதன், ஹரிணி. அதே பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் சிவகுருநாதன் 8-ம் வகுப்பும், ஹரிணி 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
இந்நிலையில் கொரோனா தொடங்கிய காலத்தில் இவர்களின் அம்மா வாகன விபத்தில் பலியாக, டிரைவராக இருந்த தந்தையும் புற்றுநோயால் உயிரிழந்தார். அதனை தொடர்ந்து, அவர்களை பராமரித்து வந்த பாட்டியும் நெஞ்சுவலியால் உயிரிழந்தார். ஆதரவற்றிருந்த குழந்தைகள் அக்கம் பக்கத்தில் சாப்பாடு, அடுத்தவர் வீட்டில் தூக்கம் என குடியிருக்க வீடு, அன்றாட உணவுக்கு வழியின்றி தவிக்கின்றனர். மேலும், கண்பார்வை குறைபாட்டுடன் உள்ள, நடக்க முடியாத தங்கள் தாத்தாவையும் பராமரித்துக்கொண்டு பள்ளிப்படிப்பையும் தொடர்கின்றனர்.
மனதை கனக்கச் செய்யும் இந்தக் குழந்தைகளின் நிலை குறித்து அவள் விகடன் ஃபேஸ்புக் பக்கத்தில், கடந்த வெள்ளிக்கிழமை வீடியோ வெளியிட்டிருந்தோம். அந்த வீடியோவைப் பார்த்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நம்மிடம் குழந்தைகளின் தொடர்பு எண் பெற்று, அன்றைய தினமே குழந்தைகளிடம் போனில் பேசி ஆறுதல் கூறியிருந்தார்.
இந்நிலையில் இன்று மாலை நாகமலை புதுக்கோட்டையில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்தார். குழந்தைகளிடம் நலம் விசாரித்துவிட்டு, ’முதல்வர் ஸ்டாலின் தான் உங்களை நேரில் சந்திக்க அனுப்பி, தேவையான உதவிகளைச் செய்து கொடுக்கச் சொன்னார். உங்களுக்கான கல்வியைத் தடையின்றி தொடர முழு உதவி செய்ய அதிகாரிகளிடம் கூறியுள்ளேன். படிப்பில் மட்டும் முழு கவனம் செலுத்துங்கள். மற்றதையெல்லாம் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்’ என்று நம்பிக்கை கொடுத்தார்.
மேலும், குழந்தைகளின் தாத்தா மாயாண்டியிடம், ’’குழந்தைகளை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம், கவலைப்பட வேண்டாம்’’ என தைரியம் கூறினார். தாத்தா, குடியிருக்க வழியின்றி உள்ள தங்களுக்கு வீடு கட்டித்தர ஏற்பாடு செய்ய வேண்டும் என அமைச்சரிடம் கோரினார். இடிந்து கிடந்த அவர்களின் வீட்டை அமைச்சர் பார்வையிட்டார். பிறகு மதுரை மாவட்ட கலெக்டரிடம் பேசி, வீடு கட்டிக் கொடுப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக முதியவரிடம் உறுதியளித்தார். தொடர்ந்து, அமைச்சர் தனது சொந்த நிதியை குழந்தைகளிடம் தனித்தனியாக வழங்கிவிட்டுச் சென்றார்.
முன்னதாக, மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளும், குழந்தைகள் நலத்துறை அதிகாரிகளும் குழந்தைகளிடம் விசாரித்துள்ளனர். மேலும் குழந்தைகள் விடுதியில் தங்கிப் பயில்வதற்கான ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.
அமைச்சர் திடீர் விசிட் செய்து, ஆதரவற்ற குழந்தைகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதோடு தேவையான உதவிகளையும் செய்துகொடுக்க உத்தரவிட்டதை பொதுமக்கள் பாராட்டினர்.